டொரண்டோவில் இரண்டு வாரங்களாகக் காணாமல் போயிருந்த சிறுமி மீட்பு

டொரண்டோவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போய், தீவிரமாகத் தேடப்பட்டு வந்த 14 வயதுடைய எஸ்தர் என்ற சிறுமி பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவர் எட்டோபிகோக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் “நல்ல உடல் ஆரோக்கியத்துடன்” இருப்பதாக நம்பப்பட்ட போதிலும், மேலதிக பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஸ்தரின் இந்த நீண்டகால மறைவுக்குப் பின்னால் ஏதேனும் “குற்றச் செயல்கள்” நடந்துள்ளனவா என்பது குறித்தே இனிவரும் பொலிஸ் விசாரணைகள் நகரும் என தெரிவித்துள்ளனர்.
அவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் குதிரைப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளைப் பயன்படுத்தி, மிக அரிதாக முன்னெடுக்கப்படும் ‘லெவல் ஒன்’ தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தனர்.
ஏர்ல் பேல்ஸ் பூங்காவில் வான்வழித் தேடுதலுக்காக ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. சிறுமியின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் மற்றும் சமூகம் பெரும் கவலை அடைந்திருந்தனர்.
அதேநேரம், சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியும், தனியான கட்டுப்பாட்டு மையங்களை அமைத்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முயற்சித்தனர்.
இந்த விசாரணைக்கும் எஸ்தரின் குடும்பத்திற்கும் ஆதரவாக இந்த சமூகம் ஒன்று திரண்ட விதம் உண்மையிலேயே வியக்கத்தக்கது.
இது வெறும் பொலிஸ் தேடுதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி எஸ்தர் மீட்கப்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் தங்களால் நிம்மதியாக “மூச்சு விட முடிகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
![]()