மாகாண சபைகளுக்கு இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்தவும்

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான திருத்தங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், ராஜித சேனாரத்ன, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில்,
2014ஆம் ஆண்டிலேயே இறுதியாக மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட்டது. இதன்படி 12 வருடங்களாக எந்தவொரு மாகாண சபைகள் தேர்தலும் நடத்தப்படவில்லை. மாகாண சபைகளுக்கென முக்கிய பணிகள் உள்ளன. தொட்டிலில் இருந்து சுடுகாடு வரையில் மாகாண சபைகளுக்கென பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தினாலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எந்தவொரு மாகாண சபைக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை. எனினும் அதற்கான நிதி ஒதுக்கப்படுகின்றது. முழுமையாக ஆளுநரின் எண்ணப்படியே நிதிகள் இப்போது பயன்படுத்தப்படுகின்றது. மக்கள் பிரதிநிதிகள் இதில் பங்கெடுக்காமல் இருப்பது மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும்.
2017ஆம் ஆண்டில் அப்போதைய தேர்தல் முறைமையை இல்லாமல் செய்து புதிய தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்ட போதும், தேர்தல் முறைமை முழுமைப்படுத்தாத காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. இந்நிலையில் 43 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்து 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த முறைமையில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாது என்று எந்தவொரு கட்சியினாலும் தேர்தலை நடத்த முடியாது என்று கூற முடியாது. அதற்கான உரிமை அவருக்கு கிடையாது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான திருத்தங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றோம் என்றார்.
![]()