சாணக்கியனின் பிரேரணையை நிறைவேற்றாது மாகாண சபைத் தேர்தலை பிற்போட அரசு முயற்சி

சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றினால் தாமதிக்காமல் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் என்றும், ஆனால் அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதால் தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் எமது கட்சி பங்காளி அல்ல என்றாலும் மாகாண சபைகள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற விடயத்திற்கு நாங்கள் இணங்குகின்றோம். இதனால் நாங்களும் இந்த கோரிக்கையில் இணைந்து கொள்வதால் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ளேன்.
மாகாண சபைகள் தேர்தல்கள் கலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம். 2017ஆம் ஆண்டில் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்ட காரணத்தினால் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாமல் இருக்கின்றது. அவ்வாறான சிக்கல் ஏற்பட்ட உடனேயே பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான நோக்கத்தில் அப்போது நான் தனி நபர் பிரேரணையொன்றை கொண்டுவந்தேன். அப்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காரணத்தினால் அடுத்த பாராளுமன்றத்திலும் அதுபோன்ற பிரேரணையை மீண்டும் கொண்டுவந்தேன். அது இரண்டாம் வாசிப்பில் நிறைவேறியிருந்ததுடன், மூன்றாம் வாசிப்பில் நிறைவேற இருந்த தருணத்தில் பாராளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பியினால் நான் கொண்டு வந்த அதே தனிநபர் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. அது முதலாம் வாசிப்பில் நிறைவேறியுள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் எவரும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. இதன்படி இதனை ஒரே நாளில் நிறைவேற்ற முடியும். அது நிறைவேற்றப்பட்டால் உடனடியாக மாகாண சபைகள் தேர்தலை பழைய முறைமையில் நடத்தலாம்.
இதேவேளை இப்போது அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் சட்டமா அதிபர் கூறியுள்ளதாவது, அதில் முதலாவதாக கூறியதானது அந்த சட்டத்தை நிறைவேற்றி பழைய முறைமையில் தேர்தலை நடத்தலாம் ஆனால் அவ்வாறு செய்யும் போது பெண்களுக்கும் இளைஞர்களுக்குமான 25 வீத ஒதுக்கீடு வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சகல கட்சிகளும் இணைந்து நாங்கள் சுயமாகவே எமது நியமனத்தில் அந்த 25 வீதத்தை வழங்குவோம் என்று உறுதியளித்துள்ளோம்.
இவ்வாறான நிலைமையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது. ஆனால் அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் இன்னும் தேர்தலை நடத்தவில்லை. அரசாங்கம் தேர்தலுக்கு பயந்தே அதனை பிற்போடுகின்றது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. எந்தக் காரணத்திற்காகவும் அதனை ஒத்திவைக்க முடியாது. இதனால் அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.
![]()