இலங்கை

யாழில் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி  இராணுவம், அரச உயர் மட்டத்துடன் யாழ்.ஆளுங்கட்சியினர் கடும் தர்க்கம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இராணுவத்துடனும் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் ஆளுங்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய போதிலும் அவற்றை விடுவிப்பதற்கு இராணுவம் தொடர்ச்சியாகப் பின்னடித்தது. இதையடுத்தே, காணிகளை விடுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ். மாநகரசபை உறுப்பினர் கபிலன் உள்ளிட்ட தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் கருத்தைத் தொடர்ந்தே பலாலி வீதி உள்ளிட்ட பல விடயங்களில் இராணுவம் விட்டுக்கொடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிகாரிகள் போதிய அழுத்தத்தை வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காணி விடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடலில் அரச அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டன. எனினும், இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான வலுவான அழுத்தத்தை யாழ்ப்பாணம் மாவட்ட அதிகாரிகள் வழங்கவில்லை. இராணுவத்தினர் கூறுவதைக் கேட்கும் நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி விடுவிப்பு நடவடிக்கை வெற்றியளிக்காமைக்கு அரச அதிகாரிகளின் மந்தமான செயற்பாடே காரணம் என்றும் கூறப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் ஏனைய மாவட்டங்களின் அரச அதிகாரிகள் முழுமையான தரவுகளுடன் வலுவான கோரிக்கைகளை இராணுவத்திடம் முன்வைத்து தமக்கான தீர்வைப் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button