வட,கிழக்கு ஆயர்களின் கருத்தை கத்தோலிக்க திருச்சபை கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை நினைவுத் தூபியொன்றை தமிழ்மக்களுடன் இணைந்து அமைத்தே தீருவோமெனத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் செயற்பட வேண்டுமென்பது கத்தோலிக்க திருச்சபையின் கொள்கையாகவுள்ளது. தற்போதைய பரிசுத்த பாப்பரசரின் சொந்தநாடு அமெரிக்காவாகக் காணப்படுகின்ற போதிலும் அவரது நாட்டுத் தலைவரான அமெரிக்க ஜனாதிபதி மத்திய கிழக்கிலும், குறிப்பாக பலஸ்தீனத்திலும் செய்கின்ற அநியாயங்கள் தொடர்பில் வெளியிடுகின்ற கருத்துக்களைக் கண்டித்து வருவதுடன் குரலில்லாத மக்களின் குரலாகவும் ஒலித்து வருகிறார்.
வடக்கு- கிழக்கைச் சேர்ந்த அனைத்து ஆயர்மார்களும் முள்ளிவாய்க்காலில் நடந்தது ஒரு இன அழிப்புத் தான் என்பதை 2022 ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்து வெளிப்படுத்தியிருந்தனர். தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலை தான் எனவும், சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்தா பீரிஸ் அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவுநாளையொட்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் அவரது கருத்துக்களைக் கொச்சைப்படுத்தியதுடன் மாத்திரமல்லாமல் அவரது தனிப்பட்ட பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபை செயற்படுவது மிகவும் பொருத்தமில்லாததொரு செயல்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறுப் படுகொலைத் தாக்குதல் சம்பவம் பதிவாகிய பின்னர் சர்வதேசக் குற்றவியல் விசாரணை அவசியம் நடாத்தப்பட வேண்டுமெனக் கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு மறை மாவட்டப் பேராயர்.மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார். இக் கோரிக்கை நியாயமான கோரிக்கை. அதேநேரம் தமிழ்மக்கள் மீதான இன அழிப்புக்கும் ஒரு சர்வதேசக் குற்றவியல் விசாரணை என்பது தவிர்க்க முடியாதது. இதுதொடர்பான கோரிக்கையை மல்கம் ரஞ்சித் ஆண்டகை இதுவரை முன்வைக்காமலிருப்பது கத்தோலிக்க திருச்சபையை நேசிக்கும் தமிழ்மக்கள் உட்பட ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் மிகப் பெரும் ஏமாற்றத்தையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
![]()