மாகாண சபைத் தேர்தல் விரைவில்!; அரசாங்கம் கூறுகிறது

மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் காலத்தை சரியாக கூற முடியாவிட்டாலும், கூடிய விரைவில் அந்தத் தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. 8 மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் என இரண்டு தேர்தல்களை நடத்திய அரசாங்கமாகும். இதற்கு முன்னர் நடத்துவதற்கு தேர்தல் இல்லையென ஆட்சியாளர்கள் கூறினர். ஆனால் நாங்கள் மக்களின் இறையாண்மையை பாதுகாத்து மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கே எதிர்பார்க்கின்றோம். உள்ளூராட்சித் தேர்தலுடன் அல்லது அதற்கு முன்னர் இந்தத் தேர்தலை நடத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
எவ்வாறாயினும் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வத்துடன் இருந்தாலும் அதில் சட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. இதனால் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படுகின்றது. இதன்படி பாராளுமன்றத்தில் சட்ட திருத்தங்களை செய்து கொடுத்தால் எங்களுக்கு தேர்தலை நடத்த முடியும். புதிய முறைமைக்கான சட்டமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும் குறைபாடுகளை கொண்டுள்ளது. இதனால் அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் தேர்தலை நடத்தலாம். எந்த மாதத்தில் தேர்தலை நடத்தலாம் என்று கூற முடியாவிட்டாலும் கூடிய விரைவில் தேர்தலை மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
![]()