இலங்கை

கட்சித் தாவலுக்கு விரைவில் தடை!; சட்டமூலம் விரைவில் – அமைச்சர் நளிந்த 

எதிர்க்கட்சியில் இருந்து எவரையும் அரசாங்கத்துடன் இணைக்க மாட்டோம் என்றும், கட்சித் தாவலுக்கு எதிரான சட்டமூலத்தை கூடிய விரைவில் முன்வைப்போம் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் ஒவ்வொருவரின் பெயரை கூறி அரசாங்கத்தின் பக்கம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் இது தொடர்பில் ஒன்றை கூற வேண்டும். அதாவது 2024 நவம்பர் மாதத்தில் மக்கள் புதிய பாராளுமன்றத்தை அமைத்தனர். இதன்போது 159 பேர் ஆளும் கட்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையில் எதிர்க்கட்சியில் இருந்து எவரையும் ஆளும் கட்சியுடன் இணைப்பதற்கு எங்களிடையே விருப்பமோ அல்லது முயற்சியோ கிடையாது. சிலர் எங்களை அழைத்தனர் என்றெல்லாம் கூறுவதற்கு ஆசைப்படுகின்றனர். ஆனால் நாங்கள் அவ்வாறு எவரையும் அரசாங்கத்தில் இணைக்கப் போவதில்லை.

இதேவேளை மக்கள் ஆணைக்கு எதிராக கட்சித் தாவுகின்றவர்களுக்கு எதிரான எம்.பி பதவியை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button