யாழ்ப்பாணத்தில் மேலும் காணிகள் விடுவிக்கப்படுமா?; பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கள ஆய்வு விஜயம்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஷ்னர் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இதன் போது உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக பலாலி வீதியின் கிழக்கில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்க அதிபரால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக கபிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்கான காணி விஸ்திரிக்கப்பட்ட போது அக் காணிக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை என அரசாங்க அதிபரால் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது, விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவதற்கான நடவடிக்கைகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
![]()