பலதும் பத்தும்

வெப்பத்தை சமாளிக்க ஏசி ஹெல்மெட்

இந்தியத் தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில், நீண்ட நேரம் வீதிகளில் நின்று போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் பொலிஸாரைப் பாதுகாப்பதற்காக டெல்லி காவல்துறை சிறப்பு விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதிகப்படியான வெப்பத்திலிருந்து அதிகாரிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பம் சார்ந்த நோய்களிலிருந்து தப்பவும் போக்குவரத்து காவல்துறை புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, களத்தில் பணியாற்றும் பொலிஸாருக்கு குளிர்சாதன ஹெல்மெட்டுகள் (AC Helmets), எடுத்துச் செல்லக்கூடிய சிறிய மின்விசிறிகள் (Portable Fans), குடிநீர் போத்தல்கள் மற்றும் ஓ.ஆர்.எஸ் (ORS) பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

“சோதனை அடிப்படையில் 10 ஏசி ஹெல்மெட்டுகளும், 10 சிறிய மின்விசிறிகளும் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒவ்வொரு போக்குவரத்துப் பிரிவிற்கும் (Traffic Circle) தலா 2,000 குடிநீர் போத்தல்களும் (750 மிலி), 900 ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கடமையின் போது தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய 20 லீட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் விநியோகக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கடுமையான கோடை காலத்தைக் கருத்திற்கொண்டு, வெளியில் தங்கிப் பணியாற்றும் அதிகாரிகளின் ஆரோக்கியத்தைப் பேண இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களுக்குத் தண்ணீரை விநியோகிக்க நடமாடும் உணவு வாகனம் (Food Van) ஒன்றும் தொடர்ந்து பயணித்து வருகிறது” என்றார்.

இந்த முயற்சியின் மூலம், கடுமையான வெயிலிலும் போக்குவரத்து போலீசார் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு உடல் தகுதியுடன் கடமையாற்றுவதை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர். அத்துடன் பணியின் போது பொலிஸார் அவ்வப்போது சிறிய இடைவேளைகளை எடுத்துக் கொள்ளவும், போதிய அளவு தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து களத்தில் பணியாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கையில்,

“இந்த ஏசி ஹெல்மெட் சுட்டெரிக்கும் வெயிலிலும் கணிசமான நிம்மதியைத் தருகிறது. இது தலைப் பகுதியைச் சுற்றி குளிர்ந்த காற்றைச் சுழல விடுவதன் மூலம் குளிர்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது. வெளியில் தொப்பி அணிவதை விட இது மிகவும் வசதியானது. இந்த ஹெல்மெட் வெறும் 200 கிராம் எடையைக் கொண்டதுடன், தொடர்ந்து 4 முதல் 5 மணித்தியாலங்கள் வரை இதனை அணிய முடியும்” என்றார்.

இந்த ஹெல்மெட்டுகள் மற்றும் மின்விசிறிகளின் உழைப்புத் திறன், நீண்ட காலச் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தகட்டமாகப் பரவலாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button