இலங்கை

ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளால் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கலாம்

சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எப்.) நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் விரைவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்வது, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துவெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கொசெக், கடந்த ஏப்ரல் 9ம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே ஒரு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செயற்குழுவின் ஒப்புதலுக்காக இந்தத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, இலங்கை பல பூர்வாங்க நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை உள்ளடக்கும் வகையில் விலை நிர்ணய சூத்திரங்களைச் செயல்படுத்துதல், நலிவடைந்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கான நிவாரண வழிமுறைகளைச் செயல்படுத்துதல் மற்றும் நிதி உத்தரவாதங்களை நிறைவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்தே, இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும் என்று ஜுலி கொசெக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செலவின மீட்பு விலை சீர்திருத்தங்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் ஆகிய இரண்டையும் வழங்குவதையே இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை சமீபத்தில் சந்தித்த புயலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் வெளிப்புறத் தாக்கமும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட எரிபொருள் மானியத் திட்டம், குறிப்பாக ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவது, சர்வதேச நாணய நிதியத்தின் விலை நிர்ணயக் கட்டமைப்புடன் முரண்படுவதாக இதன்போது செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோதும் அதற்கான நேரடிப் பதில் வழங்குவதில் இருந்து ஜுலி கொசெக் பிடிகொடுக்காமல் நழுவியுள்ளார்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகளை நிறைவேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் கடமைப்பாடுகளில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

அதன் பிரகாரம் எரிபொருட்களுக்கான விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button