முச்சந்தி
மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கம் குறைகிறதா? அரபுலகில் புதிய கூட்டணிகள் உருவாகுமா ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

மத்திய கிழக்கு என்பது உலக அரசியலின் எரிபொருள் மையம் மட்டுமல்ல, அது உலக வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி நடைபெறும் முக்கிய மேடையாகவும் இருந்து வருகிறது. ஈரான் மீதான போர் காரணமாக
இன்று எழும் மிகப் பெரிய கேள்வி, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் உண்மையிலேயே குறைந்து வருகிறதா, அதற்கு இணையாக, புதிய கூட்டணிகள் உருவாகின்றனவா என்பதும் உலக அரசியலின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், குறிப்பாக எண்ணெய் அரசியலை மையமாகக் கொண்டு, அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை கட்டியெழுப்பியது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட போர்கள், பொருளாதார மாற்றங்கள், புதிய வல்லரசுகளின் எழுச்சி மற்றும் பிராந்திய அரசுகளின் புதிய அரசியல் அணுகுமுறைகள் காரணமாக, மத்திய கிழக்கின் அரசியல் சமநிலை வேகமாக மாறி வருகிறது.
வளைகுடாவில் அமெரிக்க ஆதிக்கம்:1970களிலிருந்து அமெரிக்கா, சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுடன் நெருங்கிய உறவை உருவாக்கியது. எண்ணெய்க்கு பாதுகாப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்கா தனது இராணுவ சக்தியையும் அரசியல் செல்வாக்கையும் மத்திய கிழக்கில் விரிவுபடுத்தியது.
1991 வளைகுடா போர், 2003 ஈராக் ஆக்கிரமிப்பு, ஆப்கானிஸ்தான் போர் ஆகியவை அமெரிக்காவின் நேரடி இராணுவ ஆதிக்கத்தை உலகிற்கு வெளிப்படுத்தின. ஆனால் இப்போர்கள் நீண்டகால அரசியல் நிலைத்தன்மையை உருவாக்கவில்லை. மாறாக, பிராந்தியத்தில் குழப்பம், தீவிரவாதம், அகதிப் பிரச்சினை மற்றும் பொருளாதார சீர்கேடு அதிகரித்தன.
ஆனாலும் ஈராக் போர் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை கடுமையாக பாதித்த முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
சீனா ரஷ்ய பிராந்திய ஆதிக்கம்:
அதேவேளை மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு சவாலுக்கு உள்ளாகக் காரணமான மிகப்பெரிய மாற்றம் சீனாவும் ரஷ்யாவும் பிராந்திய இராணுவ ஆதிக்க நிலையில் இருப்பதே ஆகும்.
முக்கியமாக சீனாவின் அமைதியான முன்னேற்றம் வளைகுடாப் பகுதியில் மட்டும் அன்றி உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனா நேரடி போர்களில் ஈடுபடாமல், பொருளாதார முதலீடுகள் மூலம் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருக்கிறது. “Belt and Road Initiative” திட்டத்தின் மூலம் சீனா வளைகுடா நாடுகள், ஈரான், எகிப்து போன்ற நாடுகளுடன் வலுவான உறவுகளை உருவாக்கியுள்ளது.
அதேவேளை சில ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியா – ஈரான் இடையிலான உறவுகளை மீட்டெடுக்க சீனா நடத்திய சமரச முயற்சி உலக அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இது முன்பு அமெரிக்கா மட்டுமே வகித்த மத்தியஸ்த சக்தி என்ற இடத்தை சீனா நோக்கி நகர்த்தியது.

அதேவேளை ரஷ்யாவின் இராணுவ மீளுருவாக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிரியா உள்நாட்டுப் போரில் ரஷ்யா நேரடியாக தலையிட்டது மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கை மீண்டும் உயர்த்தியது. அமெரிக்கா தயக்கம் காட்டிய இடத்தில் ரஷ்யா தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்தியது. தற்போது சிரியாவில் இருந்து ரஷ்யா வெளியேறி இருக்கிறது. ஆனால் ஈரான் மற்றும் சில அரபு நாடுகள் ரஷ்யாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை பராமரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கூட்டணிகளின் உருவாக்கம்:
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்க தாக்குதலின் விளைவு மத்திய கிழக்கின் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பழைய அமெரிக்கா மற்றும் எதிரிகள் என்ற இருமுனைப் பிரிவு மெல்ல சிதறி வருகிறது. அதற்குப் பதிலாக பல அடுக்குகளைக் கொண்ட புதிய கூட்டணிகள் உருவாகின்றன. ஈரான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து செயல்படும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கவின் போர் காரணமாகவும், மேற்கத்திய அழுத்தங்களுக்கு எதிராக ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கி வருகின்றன.
பொருளாதாரம், ஆயுத வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இவர்களின் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.
ஈரான் போரின் பின்னர் வளைகுடா நாடுகளின் சுயாதீன அரசியல் கூட்டணிகள் உருவாக சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள், இனி முழுமையாக அமெரிக்காவை மட்டும் சார்ந்து இருக்க விரும்பவில்லை.
அவை ஒரே நேரத்தில் அமெரிக்காவுடனும், சீனாவுடனும், ரஷ்யாவுடனும் உறவுகளை பேணும் பலதரப்பு அரசியல் அணுகுமுறையை பின்பற்றுகின்றன. அத்துடன் BRICS கூட்டணியில் இணைவதற்கான வளைகுடா நாடுகளின் ஆர்வம், உலக அரசியல் மையம் மாறிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மற்றோர் பக்கம் இஸ்ரேல் – அரபு நாடுகள் நெருக்கம் அதிகரித்து வருகிறது. அபிரகாம் ஒப்பந்தங்களின் பின்னர், சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவுகளை மேலும் மேம்படுத்தி வருகின்றன. இது ஈரானின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் புதிய பாதுகாப்புக் கூட்டணியாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனாலும் காசா போர் மற்றும் பாலஸ்தீன பிரச்சினை மீண்டும் இந்த உறவுகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் அமெரிக்க ஆதிக்கம் முழுமையாக குறைந்து விட்டது என்றும் கூற முடியாது. ஏனெனில்
அமெரிக்கா முற்றிலும் பலவீனமடைந்துவிட்டது என்று கூறுவது மிகைப்படுத்தலாக இருக்கும். ஏனெனில், உலகின் மிகப்பெரிய இராணுவ தளங்கள் இன்னும் மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கே உள்ளன.
இஸ்ரேல் மற்றும் பல வளைகுடா நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்கின்றன. அமெரிக்க டாலர் இன்னும் உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நாணயமாக உள்ளது.

ஆயினும் மாற்றமடைந்திருப்பது அமெரிக்காவின் அதன் “ஏகபோக ஆதிக்கம்” தான். முன்பு அமெரிக்கா மட்டும் தீர்மானித்த பிராந்திய அரசியல், இன்று பல வல்லரசுகள் போட்டியிடும் சூழலாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளும் இனி ஒரே வல்லரசை மட்டுமே சார்ந்திராமல், தங்கள் நலனுக்கு ஏற்ற பலதரப்பு உறவுகளை உருவாக்குகின்றன.
எதிர்கால மத்திய கிழக்கு:
ஆயினும் மத்திய கிழக்கின் எதிர்காலம் பல முக்கிய அம்சங்களால் தீர்மானிக்கப்படலாம். முதலாவதாக
எரிசக்தி அரசியல் – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் கட்டுப்பாடு. இரண்டாவது சீனா – அமெரிக்கா போட்டி – உலக வல்லரசு மோதலின் மையமாக மத்திய கிழக்கு மாறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் பிராந்திய தேசியவாதம் – வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டிய உள்ளூர் அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கு இனி ஒரே வல்லரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி அல்ல; மாறாக பல வல்லரசுகள் செல்வாக்கு செலுத்தும் புதிய புவியியல் அரசியல் மேடையாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போருக்கு முன்பாகவே மத்திய கிழக்கில் புதிய கூட்டணிகள் உருவாகும் செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. சீனா, ரஷ்யா, ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவை தங்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு புதிய அரசியல் சமநிலைகளை உருவாக்குகின்றன. ஆனாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் முழுமையாக மறைந்துவிடவில்லை. ஆனால் அது முன்புபோல எதிர்ப்பின்றி செயல்படும் ஒரே வல்லரசாக இனி இல்லை. உலக அரசியல் ஒற்றை துருவ நிலையிலிருந்து பல துருவ நிலைக்குத் தள்ளப்படும்போது, அதன் மிகத் தெளிவான பிரதிபலிப்பை இன்று மத்திய கிழக்கிலேயே காண முடிகிறது.
![]()