அக்கினிக்குஞ்சு 16 ஆவது ஆண்டு விழா சாதனைத் திருநாள்….. கி.செ.துரை (டென்மார்க்) வாழ்த்துச் செய்தி

புலம் பெயர் நாடொன்றில் 16 வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடுவது சாதாரண விடயமல்ல அது சாதனைகளின் உச்சமாகும். இணைய இதழ் ஒன்றை தொடர்ந்து நடத்துவது அதைவிட மாபெரும் சாதனையாகும். இவற்றில் நிறைந்த அனுபவம் உள்ளதால் என் உள்ளத்திற்கு தெரியும் இதன் சுமை.
இணையம் என்பது என்றும் குழந்தையாகவே இருக்கும், அதற்கு தாய் பால் ஊட்டுவது போல சகல கடமைகளையும் அதன் ஆசிரியரே அன்றாடம் செய்தல் வேண்டும். ஒரு நாள் கவனியாது விட்டாலே போதும் குழந்தை நோயால் படுத்துவிடும். அக்கினிக்குஞ்சு பாஸ்கர் 16 வருடங்களாக அதை வளர்த்து அரிய பணியாற்றியுள்ளார். டென்மார்க்கில் இருந்து பார்க்க என் மனக்கண்ணில் அவரின் காத்திரமான பணியின் பாரம் தெரிகிறது.
சாதனை புரிந்தவர்களை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்ட நல்ல மனது வேண்டும். அக்கினிக்குஞ்சு பாஸ்கரிடம் அதற்கு குறைவில்லை. தனது கடமையில் அவர் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார். மற்றவரை மனதால் போற்றுவது மட்டுமல்ல அதை செயலாலும் செய்கிறார். அவரை நம்பி ஒரு கருமத்தில் கால் பதிக்கலாம் என்பதற்கு கடந்த 16 வருடங்களில் அவருடைய உறுதியான தளர்வற்ற அரும் பணியே நல்ல சான்றாகும்.

டென்மார்க்கில் இருந்து வஸந்த் செல்லத்துரையை அழைத்து, இளைஞரான அவரை ஊக்குவித்து, பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கியது அக்கினிக்குஞ்சே என்பதை டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அக்கினிக்குஞ்சின் தேர்வு சரியானதே என்பதை உறுதி செய்வது போல வஸ்ந்த் செல்லத்துரைக்கு டென்மார்க் நாட்டின் சிறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் விருதை டேனிஸ் மகாராணி வழங்கி டென்மார்க் நாடே போற்றியது அக்கினிக்குஞ்சிற்கும் சிறப்பே.
இதுபோல அக்கினிக்குஞ்சின் சாதனை விருதுகள் யாவும் சிறப்போடு அமைவதை அறிந்து மகிழ்கிறேன். இம்முறையும் விருது பெறும் அனைவரையும் பராட்டி மகிழ்கிறேன். அத்தோடு பிரபல எழுத்தாளர் அமரர் எஸ்.பொவின் உருவப்படத்தை மறவாது நினைவு படுத்துவது காலத்தின் தொடர்ச்சியை பேணும் அழகாக இருக்கிறது. சாதனை மனிதர்களை மறக்கவிடாது காப்பதும் அரும் பணியாகும்.
வருடா வருடம் தமிழகத்தில் இருந்து இசைக்குழுவை வரவழைத்து அந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவது சின்ன விடயமல்ல. கங்கை அமரன் முதல் பல இசைக்குழுக்களை வரவழைத்த அனுபவம் உள்ளதால் அதன் பாரத்தை என்னால் அறிய முடிகிறது. உண்மையில் இது அபாரா சாதனையாகும். அக்கினிக்குஞ்சு இம்முறையும் மிகச்சிறந்த இசை நிகழ்ச்சியை வழங்க இருப்பதை பார்க்கும் போது அதன் வளர்ச்சி படிப்படியாக முன்னேறி வருவது தெரிகிறது.
அக்கினிக்குஞ்சு எஸ். பாஸ்கர் அவர்கள் டென்மார்க் நாட்டிற்கும் பல தடவைகள் வந்துள்ளார். டென்மார்க் வயன் நகரில் அளப்பரும் கலைச் சேவை, அரசில் என்று பல முகங்களில் செயற்படும் அருமை நண்பர் தர்மா தர்மகுலசிங்கத்தின் முயற்சிகளில் எஸ். பாஸ்கர் அவர்களுடைய நிழலை கண்டு மகிழ்ந்துள்ளேன்.
அவுஸ்திரேலியா நாட்டில் அரிய சாதனை படைக்கும் அக்கினிக்குஞ்சு 16 வது ஆண்டு விழாவை டென்மார்க்கில் இருந்து வாழ்த்தி மகிழ்கிறேன். இந்த விழாவினை சிறப்போடு நடத்த அரும் பாடுபடும் அனைவரையும் மனதால் போற்றி வாழ்த்துகிறேன்.

![]()