முச்சந்தி

2027 முதல் பெரும் கடன் மலைக்குள் நுழைகிறோம்; மரணப் பொறிக்குள் தள்ளப்படும் நாடு!

2027 முதல் வட்டிக்கு மேலதிகமாக கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டும். நாம் இங்கு ஒரு கடன் மலைக்குள் நுழைகிறோம். 2027 தொடக்கம் ஆண்டுதோறும் வட்டிக்கு மேலதிகமாக 3-4 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் . இந்த அரசாங்கம் நாட்டை ஒரு மரணப் பொறிக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. ஆகையினால் ஐ.எம்.எப்.புடன் புதிய இணக்கப்பாட்டை நோக்கிச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்   இடம் பெற்ற அமர்வின்போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தி ய அவர் மேலும் பேசுகையில்,

பேரம் பேசுவதற்கு சாதகமான ஒரு வலுவான நிலையில் நாம் இருக்கும் இந்த தற்போதைய தருணத்திலேயே பேச்சுவார்த்தைகளை நடத்துங்கள். இலங்கை தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பைத் தன்வசம் கொண்டுள்ளது. நமது தற்போதைய திட்டம் 2027 மார்ச் முடிவடையும் போது, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்)எதிர்பார்க்கும் இலக்கு 14.2 பில்லியன் டொலர் ஆகும். அந்த இடைவெளியை நிரப்புவதற்கு, எதிர்வரும் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 600 மில்லியன் டொலர் வீதம் நாம் கையிருப்பைச் சேகரிக்க வேண்டியிருக்கும். நாம் அந்த இலக்கை அடைவதற்கான சரியான பாதையில் பயணிக்கவில்லை. அப்படியிருந்தும், 2027 மார்ச் மாதத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அரசாங்கம் எதையும் கூறவில்லை.

தொடர்ச்சியான அடுத்த சர்வதேச நாணய நிதியத் திட்டம் ஒன்றிற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 12 மாதங்களுக்குள், டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு சுமார் 14% வீழ்ச்சியடைந்துள்ளது .மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் பிராந்திய பொருளாதாரத்தை மறுவடிவமைத்து வரும் வேளையில், நமக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 8.1 பில்லியன் டொலர் வெளிநாட்டு அனுப்பீடுகள் வளைகுடா நாடுகளின் தொடர்ச்சியான வேலைவாய்ப்புகளிலேயே பெரிதும் தங்கியுள்ளன. இவை தூரத்து ஆபத்துகள் அல்ல.

நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் 17 திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். உண்மையான நெருக்கடியை எதிர்கொண்ட அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கையிருப்புகள் முற்றிலும் வற்றிப்போய், ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையிலேயே நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வேறு வழியில்லாத காரணத்தினால், முன்வைக்கப்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டது.

ஆனால், இந்தத் தருணத்தில் நமக்கு ஒரு தெரிவு இருக்கிறது. 7 பில்லியன் டொலர் கையிருப்பு, செயல்பாட்டில் உள்ள ஒரு திட்டம், மற்றும் நிரூபிக்கப்பட்ட சீர்திருத்தங்களின் நம்பகத்தன்மை என்பனவாகும். இவற்றைக் கொண்டு, ஒப்பீட்டளவில் ஒரு வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு இதுவாகும். எனவே, எதிர்காலத்தை நோக்கிச் சிந்தித்து 2027 மார்ச் மாதத்திற்கான திட்டங்களை வகுக்குமாறும், சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை நாம் அடையத் தவறினால் இலங்கையிடம் உள்ள மாற்று அவசரகாலத் திட்டம் என்ன என்பதை நாட்டிற்கு விளக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

தற்போதைய ஐ.எம்.எப் திட்டம் 2027 மார்ச்சில் முடிவடைவதால் நமக்கு கிடைக்கும் விரிவாக்கப்பட்ட கடன் வசதிகள் நீங்கும்.ஐ.எம்.எப் நமது நாட்டுக்கு அமெரிக்க டொலர் 14.2 பில்லியனை பேணிச் செல்ல வேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் 7 பில்லியன், அதாவது 50% மட்டுமே காணப்படுகின்றன. இந்த 14.2 பில்லியனை பெறுவதற்கான வாய்ப்பு 0.01% மட்டுமே காணப்படுகின்றன. ஆகையினால் கடைசி நிமிடத்தில் நாடு சிக்கலில் மூழ்கிய பின் ஐ.எம்.எப் இணக்கப்பாடு ஒன்றிற்குச் செல்வதை விட, இப்போதே தொடர்ச்சியான அடுத்த கட்ட இணக்கப்பாடு ஒன்றை நோக்கிச் செல்லுங்கள்.

2027 முதல் வட்டிக்கு மேலதிகமாக கடனையும் திருப்பிச் செலுத்தி வேண்டும். நாம் இங்கு ஒரு கடன் மலைக்குள் நுழைகிறோம். ஆகையினால் புதிய இணக்கப்பாட்டை நோக்கிச் செல்ல வேண்டும். அமெரிக்க டொலர் 14.2 பில்லியன் இருக்க வேண்டி காணப்பட்டாலும், 7 பில்லியன் மட்டுமே காணப்படுகின்றன. இதன் உண்மையான மதிப்பு 7 பில்லியனை விடவும் குறைவான அளவே பயன்படுத்த முடியும். தற்போது மாதத்திற்கு 600 மில்லியன் சேர்க்க வேண்டி காணப்பட்டாலும், மாதம் 60 மில்லியன் மட்டுமே கிடைத்து வருகின்றது.

இன்றைய நிலவரப்படி, 92 ரக பெட்ரோல் 39% ஆல் அதிகரித்துள்ளது. 2022 இல் பெட்ரோல் 470 ரூபாவாக காணப்பட்டது. இன்று 410 ரூபாவாக காணப்படுகின்றன. நாடு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. ரூபாவின் 9.2% தேய்மானத்தை சந்தித்திருக்கிறது. சுற்றுலா வருமானம் 17% ஆல் குறைந்து காணப்படுகின்றது. வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 8 பில்லியனை தாண்டி காணப்படுகின்றது. இதில் 60% ஆனவை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்று வருகின்றன. யுத்தத்தின் காரணமாக வேலையில்லாப் போக்கு அதிகரிக்கக்கூடும்.

2027 இல் கடன் மலையொன்று உருவாகும் சமயத்தில் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி எம்மத்தியில் காணப்படுகின்றன. ஐ.எம்.எப் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை இல்லாமல் கடன் சேவை சுழற்சிக்குள் நாம் நுழைகிறோம். 2027 தொடக்கம் ஆண்டுதோறும் வட்டிக்கு மேலதிகமாக 3-4 பில்லியன் செலுத்த வேண்டும் . இந்த அரசாங்கம் நாட்டை ஒரு மரணப் பொறிக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.பெரும் துயர் நிலையொன்று உருவாகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை எரிபொருட்களின் விலை 39% ஆல் அதிகரிக்கும் வேளை, 2022 மார்ச் – ஜூன் கால கட்டத்தில் 44% ஆல் அதிகரித்தது. எரிபொருள் விலை 25% ஆல் கூடும் வேளை, கொடுப்பனவு சமநிலையில் பிரச்சினை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த தருணத்தில் மக்களிடம் உண்மையைக் கூற வேண்டும். எண்ணெய் பீப்பாய் ஒன்று டொலர் 60-70 ஆக காணப்பட்டால், ஆபத்துகள் குறைவாக காணப்படும். ஆனால் தற்போது 110 டொலருக்கும் அதிகமாக காணப்படுவதனால், பெரும் ஆபத்துக்கள் கையிருப்புகளின் மீது ஏற்படும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button