முச்சந்தி

பிரிட்டிஷ் பிரதமர் கெயார் ஸ்டாமர் ஆட்சி கவிழுமா? தொழிலாளர் உட்கட்சி பூசல்களின் முரண்பாடு….   ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பிரிட்டிஷ் அரசியலில் தலைமை மாற்றங்கள் சில நேரங்களில் தேர்தலில் அல்ல, கட்சிக்குள் தொடங்குகின்றன. அதனால் கெயார் ஸ்டாமரின் எதிர்காலம் மக்களிடமிருந்தும், அதே அளவில் அவரது சொந்தக் கட்சியினரிடமிருந்தும் தீர்மானிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பிரிட்டனின் தற்போதைய அரசியல் சூழலில் அதிகமாக பேசப்படும் கேள்விகளில் ஒன்று, பிரதமர் கெயார் ஸ்டாமரின் தலைமையே ஆபத்தில் உள்ளதா என்பதாகும்)
பிரிட்டனின் தற்போதைய அரசியல் சூழலில் அதிகமாக பேசப்படும் கேள்விகளில் ஒன்று, பிரதமர் கெயார் ஸ்டாமரின் தலைமையே ஆபத்தில் உள்ளதா என்பதாகும். 2024 தேர்தலில் பெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த கெயார் ஸ்டாமர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி (British Labour Party) அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திலேயே பல்வேறு அழுத்தங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. வெற்றியின் உச்சியிலிருந்து சவால்களின் மையத்துக்கு வந்துள்ள அவரது தலைமை நீடிப்பதா அல்லது அரசியல் முரண்பாடுகள் காரணமாக பலவீனப்படுமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
2024 பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபோது, கெயார் ஸ்டாமர் “புதிய பிரிட்டன்” என்ற அரசியல் காட்சியை முன்வைத்தார். நீண்டகால கன்சர்வேட்டிவ் ஆட்சிக்குப் பிறகு மக்கள் மாற்றத்தை நாடினர். அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார மீட்பு, சுகாதார சேவைகள் மேம்பாடு, குடியேற்றக் கட்டுப்பாடு போன்ற வாக்குறுதிகள் மக்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கின.
ஆனால் ஆட்சியில் அமர்ந்தபின், எதிர்கொண்ட நிதிச் சிக்கல்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை அவரது அரசை சிரமப்படுத்தின. பணவீக்கம், வீட்டு வசதி நெருக்கடி, வேலைநிறுத்தங்கள், NHS சுகாதார அமைப்பின் அழுத்தம் போன்றவை மக்களின் அதிருப்தியை அதிகரித்தன.
தொழிலாளர் கட்சிக்குள் அதிருப்தி:
பிரதமர் ஸ்டாமரின் அரசியல் பாணி குறித்து தொழிலாளர் கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் உருவாகி வருகின்றன. இடதுசாரி ஆதரவாளர்கள், அவர் கட்சியின் பாரம்பரிய சமூகநீதி கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் ஆதரவாளர்கள் மத்தியில் இந்த அதிருப்தி அதிகமாக உள்ளது.
பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி மீண்டும் 2024இல் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய பிறகு, அதன் உள்ளக அரசியலில் பல்வேறு முரண்பாடுகளும் அதிருப்திகளும் வெளிப்படத் தொடங்கியுள்ளன. பல ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சிக்குத் திரும்பிய கட்சி, இப்போது “அதிகாரத்தின் சுமை” என்னும் புதிய சவாலை எதிர்கொள்கிறது. குறிப்பாக கட்சியின் இடதுசாரி ஆதரவாளர்கள், தொழிற்சங்கங்கள், இளைஞர் பிரிவுகள் மற்றும் பாரம்பரிய தொழிலாளர் வாக்காளர்கள் ஆகியோரிடையே உருவாகும் மனக்கசப்புகள், எதிர்காலத்தில் கட்சியின் ஒற்றுமையை சோதிக்கும் நிலையை உருவாக்குகின்றன.
பிரதமர் கெயார் ஸ்டாமர் தலைமையிலான தற்போதைய தொழிலாளர் கட்சி, முன்னாள் தலைவர் ஜெரோமி கோபன் (Jeremy Corbyn) காலத்தின் இடதுசாரி அரசியல் கோட்பாடுகளிலிருந்து விலகி, மத்தியநிலை அரசியல் நோக்கத்துக்குத் திரும்பியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் மிதமான அரசியல் அவசியம் என்ற நிலைப்பாட்டை ஸ்டார்மர் வலியுறுத்துகிறார். ஆனால் இதுவே கட்சியின் அடிப்படை செயற்பாட்டாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
பலர், தொழிலாளர் கட்சி தனது வரலாற்று அடையாளங்களான சமூகநீதி, பொதுச் சொத்து பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் போன்ற கோட்பாடுகளை மெதுவாக கைவிட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். கட்சியின் கொள்கை அமைப்புகளில் அடித்தட்டு உறுப்பினர்களின் குரல் குறைந்து, தலைமை மையப்படுத்தப்பட்ட முடிவுகள் அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
மறுபுறம், மத்தியவாத அணிகள் பிரதமர் ஸ்டாமரை தேர்தலில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய நடைமுறை அரசியல்வாதி எனக் காண்கின்றன. இதனால் கட்சிக்குள் ஒரு கருத்தியல் மோதல் உருவாகியுள்ளது. இந்த உள்நிலை முரண்பாடுகள் அதிகரித்தால், அவரது தலைமையே கேள்விக்குறியாகும் அபாயம் இருக்கிறது.
அதேவேளை வெளிநாட்டு கொள்கையும் அரசியல் அழுத்தமும் கட்சிக்குள் பாரிய விவாதங்களை உருவாக்கி உள்ளது. முக்கியமாக உக்ரைன் போர், நேட்டோ உறவுகள், மத்திய கிழக்கு பதற்றம், சீனாவுடனான பொருளாதார உறவுகள் போன்ற வெளிநாட்டு கொள்கைச் சவால்களும் ஸ்டாமரின் தலைமையை சோதிக்கின்றன. குறிப்பாக காசா போருக்கு எதிரான பிரிட்டிஷ் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புகள் தொழிலாளர் கட்சியின் சில பாரம்பரிய வாக்கு வங்கிகளில் அதிருப்தியை உருவாக்கியுள்ளன என்பதும் உண்மையே.
மேலும் பாலஸ்தீன் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் வாக்காளர்களின் அதிருப்தியும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் தொடர்பான பிரிட்டிஷ் அரசியல் விவாதங்களில் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாடு கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக காசா மீதான தாக்குதல்களைப் பற்றிய கட்சித் தலைமையின் ஆரம்பகால கருத்துக்கள், முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன அதிகரித்தன.
பல உள்ளூர் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் பதவி விலகியதோடு, சிலர் கட்சியின் மனித உரிமை நிலைப்பாடு கேள்விக்குறியாகிவிட்டதாகக் கூறினர். பாரம்பரியமாக தொழிலாளர் கட்சியை ஆதரித்த பல முஸ்லிம் வாக்காளர்கள், தங்களை கட்சி புறக்கணிக்கிறது என்ற உணர்வை வெளிப்படுத்தினர். பிரிட்டனின் பல நகரங்களில் நடைபெற்ற பாலஸ்தீன் ஆதரவு பேரணிகள், அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தன. இதனால் சில உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைமையை விமர்சிக்கத் தொடங்கினர்.
பொருளாதாரமே ஆட்சியின் முக்கிய காரணி:
எவ்வாறாயினும் பிரிட்டிஷ் நாட்டின் பொருளாதாரமே ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் அரசியலில் எந்தத் தலைவரின் எதிர்காலத்தையும் முடிவு செய்வது பெரும்பாலும் பொருளாதார நிலைமையே. மக்கள் வாழ்க்கைச் செலவு குறையவில்லை என்றால், ஆட்சியின் மீதான கோபம் வேகமாக உயரும். பணவீக்கம், வரி உயர்வு, வேலைவாய்ப்பு சிக்கல்கள் தொடர்ந்து நீடித்தால், எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல தொழிலாளர் கட்சிக்குள்ளேயும் எதிர்ப்பு வலுப்பெறலாம்.
ஆனால் பொருளாதாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டால், ஸ்டாமர் தனது தலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக நடுத்தர வர்க்க வாக்காளர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வது அவருக்குப் பிரதான சவாலாக உள்ளது. ஆனாலும் கடந்த வாரம் ஏற்பட்ட பெரும் பதற்றத்தைப் போல, பிரித்தானிய தலைமை கவிழும் நிலை உண்மையிலேயே உள்ளதா என்பது குறித்தும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஆனாலும் தற்போதைய நிலையில் கெயார் ஸ்டாமர் உடனடியாக பதவியில் இருந்து அகற்றப்படுவார் என்று கூறுவது மிகைப்படுத்தலாக இருக்கும். ஏனெனில் தொழிலாளர் கட்சிக்கு இன்னும் வலுவான நாடாளுமன்ற பெரும்பான்மை அவருக்கு உள்ளது. மேலும் அவருக்கு மாற்றாக உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே தலைவரும் தெளிவாக வெளிப்படவில்லை.
ஆனால் அரசியல் வரலாறு காட்டுவது என்னவென்றால், பிரிட்டனில் பெரும்பான்மை கொண்ட பிரதமர்களுக்குக் கூட கட்சிக்குள் கிளர்ச்சி ஏற்பட்டால் நிலைமைகள் வேகமாக மாறிவிடும். இதற்கு சான்றாக முன்னைய தலைவர்கள் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் லீஷ் டிரஷ் (Liz Truss) ஆகியோரின் அரசியல் வீழ்ச்சிகள், அதற்குச் சமீபத்திய உதாரணங்களாக உள்ளன.
கெயார் ஸ்டாமரின் தலைமை தற்போது உடனடி வீழ்ச்சி விளிம்பில் இல்லை. ஆனால் அவரது அரசியல் எதிர்காலம் மிக நுணுக்கமான சமநிலையில்தான் உள்ளது. பொருளாதார வெற்றி, கட்சிக்குள் ஒற்றுமை, வெளிநாட்டு கொள்கை சமநிலை ஆகிய மூன்றையும் அவர் திறமையாக கையாள வேண்டும். இல்லையெனில் மாற்றத்திற்கான நம்பிக்கை என ஆரம்பித்த அவரது ஆட்சி, நிறைவேறாத எதிர்பார்ப்புகளின் அரசு என்ற விமர்சனத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
தொழிற்சங்கங்களின் மனக்கசப்பு பிரதமரின் அரசியல் போக்கால் தொடர்கிறது. குறிப்பாக (Trades Union Congress) மற்றும் பல தொழிற்சங்க அமைப்புகள், தொழிலாளர் கட்சியுடன் வரலாற்று உறவை கொண்டவை. ஆனால் சமீபத்திய பொருளாதார கொள்கைகள், ஊதிய உயர்வு, வேலைநிறுத்த உரிமை, அரசுச் சேவைகள் மீதான முதலீடு போன்ற விடயங்களில் தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மேலும் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தங்களுக்கு கட்சித் தலைமையிலிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்பது சில சங்கங்களின் குற்றச்சாட்டு. இதனால் தொழிலாளர் கட்சி உண்மையில் தொழிலாளர்களின் கட்சியா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி- பொது மக்கள் எதிர்பார்ப்பு:
பிரித்தானியாவில் தற்போது வாழ்வாதாரச் செலவு உயர்வு, வீட்டு வசதி நெருக்கடி, தேசிய சுகாதார சேவையின் சவால்கள் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் உடனடி மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பொருளாதார கட்டுப்பாடுகள் மற்றும் அரசின் எச்சரிக்கையான செலவுக் கொள்கைகள் காரணமாக, விரைவான மாற்றங்கள் நிகழவில்லை. இதனால், மாற்றத்திற்காக வாக்களித்தோம்; ஆனால் பழைய அரசியலே தொடர்கிறது என்ற மனநிலை சில வாக்காளர்களிடையே உருவாகியுள்ளது. இந்த ஏமாற்றம் கட்சியின் உள்ளக விமர்சனங்களுக்கும் ஊக்கமளிக்கிறது.
ஆனாலும் எதிர்கால சவால்களை எதிர்கொண்டு, தொழிலாளர் கட்சிக்குள் எழும் அதிருப்தி உடனடியாக கட்சியைப் பிளக்கும் நிலைக்கு செல்லாமல் இருந்தாலும், அது நீண்டகால அரசியல் சவாலாக மாறக்கூடும். குறிப்பாக இடதுசாரி ஆதரவாளர்கள், இளைஞர்கள், இனச் சிறுபான்மையினர் மற்றும் தொழிற்சங்கங்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது கட்சிக்கு முக்கியமான சோதனையாக இருக்கும். கெயார் ஸ்டாமர் தலைமையிலான அரசு தேர்தல் வெற்றியை மட்டுமல்லாது, கட்சியின் அடிப்படை அரசியல் ஆன்மாவையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில், அதிகாரத்தில் இருந்தபடியே தனது ஆதரவு அடித்தளத்தை இழக்கும் அபாயம் தொழிலாளர் கட்சிக்கு உருவாகலாம்.
பிரிட்டிஷ் அரசியலில் தொழிலாளர் கட்சி எப்போதும் சமூக மாற்றத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று அந்தக் கட்சியே மாற்றமா அல்லது சமரசமா என்ற உள்மனப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. பிரிட்டிஷ் அரசியலில் தலைமை மாற்றங்கள் சில நேரங்களில் தேர்தலில் அல்ல, கட்சிக்குள் தொடங்குகின்றன. அதனால் கெயார் ஸ்டாமரின் எதிர்காலம் மக்களிடமிருந்தும், அதே அளவில் அவரது சொந்தக் கட்சியினரிடமிருந்தும் தீர்மானிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button