எவரெஸ்ட் சிகரத்தில் நிகழ்ந்த பிரம்மாண்ட அதிசயம்!

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை (Mount Everest) ஏறி, நேபாளத்தைச் சேர்ந்த இரு புகழ்பெற்ற வழிகாட்டிகள் தங்களின் முந்தைய உலக சாதனைகளைத் தாங்களே முறியடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.
“எவரெஸ்ட் மனிதன்” (Everest Man) என்று அழைக்கப்படும் காமி ரீட்டா ஷெர்பா (Kami Rita Sherpa) தனது 32 ஆவது வெற்றிகரமான எவரெஸ்ட் பயணத்தை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், “மலைகளின் ராணி” (Mountain Queen) என்று அழைக்கப்படும் லக்பா ஷெர்பா (Lhakpa Sherpa) தனது 11 ஆவது எவரெஸ்ட் பயணத்தை முடித்து, உலகிலேயே அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய பெண் என்ற தனது சொந்த சாதனையை மேலும் நீடித்துள்ளார்.
“இது நேபாளத்தின் மலை ஏறும் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்” என்று நேபாள சுற்றுலாத்துறையின் ஊடகப் பேச்சாளர் ஹிமால் கௌதம் (Himal Gautam) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மே மாதம் நிலவும் சாதகமான காலநிலை சூழலில் (Spring Season), சர்வதேச மலையேற்றக் குழுவினரை வழிநடத்திச் சென்ற போதே இவ்விருவரும் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அதேவேளை, இந்த ஆண்டு நேபாள அரசு சாதனை அளவாக 492 மலையேற்ற அனுமதிகளை (Permits) வழங்கியுள்ளதால், எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, “நெரிசல்” (Overcrowding) ஏற்படும் அபாயம் குறித்தும் சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளது என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
![]()