உலகம்

அமெரிக்க – ஈரான் சமாதான முயற்சிகளுக்கு கத்தார் பூரண ஆதரவு!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைப்பதற்காக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமாதான முயற்சிகளுக்கு கத்தார் நாடு தனது ‘முழு ஆதரவை’ தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசி வாயிலாக பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் அமெரிக்க-ஈரான் சமாதான முயற்சிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

இதுகுறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிராந்தியத்தில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் வகையில், பதற்றத்தைத் தணிப்பதற்காக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமாதான முயற்சிகள் குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் விவாதித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்படுவதற்குப் பங்களித்த பாகிஸ்தான் மற்றும் பிற அனைத்துத் தரப்பினரின் முயற்சிகளுக்கும் கத்தார் பிரதமர் தனது மனமார்ந்த ‘பாராட்டுகளை’ தெரிவித்துக் கொண்டார்.

அமைதியான முறையில் இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பாகிஸ்தானின் சமாதான முயற்சிகளுக்குக் கத்தார் தனது முழு ஆதரவை வழங்குகிறது.

பிராந்தியத்தில் நிலையான அமைதியை எட்டுவதற்கான விரிவான உடன்பாட்டை நோக்கி பேச்சுவார்த்தைகளை நகர்த்த, அனைத்துத் தரப்பினரும் இந்த முயற்சிகளுக்குச் சாதகமாகப் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்,” என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button