இடுப்புப் பட்டியை இன்னும் இறுக்கிக் கொள்ள வேண்டும்; முஜிபூர் ரஹ்மான் எம்.பி.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கின்றது என்றும், நிலைமைகளை பார்க்கும் போது மக்கள் இடுப்புப் பட்டியை இன்னும் இறுக்கிக்கொள்ள வேண்டும் என்பதை போன்றே இருக்கின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது வானில் மாளிகைகள் பலவற்றை அமைத்தது. செய்ய முடியாத பல விடயங்களை கூறியது. நாட்டு மக்களை கனவு உலகத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் இன்று அவை அனைத்தும் மீறப்பட்ட வாக்குறுதிகளாக மாறியுள்ளன. இப்போது டொலரின் பெறுமதி 330 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது. டொலர் உயர்வின் மூலம் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சகல பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. மின்சாரக் கட்டணங்களும் உயர்வடைந்துள்ளன. இதனால் வாழ்க்கைச் செலவும் உயர்வடைந்து செல்கின்றது.
தற்போதைய நிலைமையை பார்க்கும் போது அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு இது உயர்வடைகின்றதாக தெரிகின்றது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வாகன கனவுகளும் இல்லாமல் செய்யப்படுகின்றது. சகல வாகனங்களும் 25 இலட்சம் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது. இந்த நேரத்தில் திறைசேரி டொலரால் நிறைந்து வழிவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் மக்களுக்கு இதன்மூலம் நிவாரணங்கள் கிடைப்பதாக தெரியவில்லை. போக போக இடுப்புப் பட்டியை இறுக்கிக்கொள்ளும் நிலைமைக்கே போய்க்கொண்டிருக்கின்றோம். இவற்றைப் பார்க்கையில் அரசாங்கத்தினால் கூறியவற்றை செய்ய முடியவில்லை என்பது உறுதியாகிக்கொண்டு போகின்றது என்றார்.
![]()