மீனவர் பிரச்சினையில் மிகவும் கவனம்; தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தமிழரசுக் கட்சி அறிவுரை

ஈழத் தமிழர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன, பல இழப்புகளை சந்தித்திருக்கின்றார்கள், இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினையும் நீண்ட காலமாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் விஜய் தன்னுடைய உணர்வுபூர்வமான பங்களிப்பை செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஞானமுத்து சிறிநேசன் வேண்டுகோள்விடுத்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த அவர் மேலும் கூறுகையில்,
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கின்றது. விஜய் முதலமைச்சராக வந்திருக்கின்றார். அதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். முதலமைச்சர் விஜய் தமிழர் விடயத்தில் மிகவும் கவனமாகவும் நடந்து கொள்வார் என்று நாங்கள் நம்புகின்றோம்.குறிப்பாக தமிழக மீனவர் பிரச்சினை என்பது தொடர் விடயமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் தமிழக மீனவர், யாழ் மீனவர்கள் என்று ஈழத் தமிழர்கள் காணப்படுகின்றார்கள். இவர்களுக்கான பிரச்சினையை மிகவும் கவனமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டு பொறுப்புணர்வுடன் தீர்த்துக் கொள்வதற்கு முதலமைச்சர் விஜய் முன்வரவேண்டும்.
ஏனென்றால் ஈழத் தமிழர்களாக இருக்கலாம், தமிழக தமிழர்களாக இருக்கலாம், நாங்கள் மொழி வழியாக, பண்பாட்டு வழியாக, எங்களுடைய பழக்கவழக்க வழியாக நாங்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்குள் பிரச்சினைகள் எழாத விதத்தில் இந்த மீனவர் பிரச்சினையை மிகவும் சாதுரியமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் . எனவே இந்த விடயத்தை மிகவும் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு விடயமாக கருதி மிகவும் அவதானமாக இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இந்த மீனவர் பிரச்சினை என்பது தமிழக மீனவ தமிழர்களுக்கும் ஈழ மீனவ தமிழர்களுக்கும் இடையில் ஒரு விரிசலாக அமைந்துவிடக்கூடாது. அதனை சரியாக கையாளக்கூடிய வல்லமை, அனுபவம் விஜய் க்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனவே இந்த விடயத்தில் இருசாராரும் பாதிக்கப்படாத விதத்தில் தமிழக மீனவர்கள் அவர்களுடைய எல்லைக்குள் மீன்பிடிக்கின்ற போது பிரச்சினை இருக்காது, ஈழத் தமிழர்கள் தங்களது எல்லைக்குள் மீன்பிடிக்கின்ற போது பிரச்சினை இருக்காது, ஆகவே இந்த மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்த தொப்புள்கொடி உறவுகளுக்கு இடையில் இடைவெளி ஏற்பட்டுவிடக்கூடாது.
எனவே தமிழர்களுக்கு ஈழத் தமிழர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன, பல இழப்புகளை சந்தித்திருக்கின்றார்கள், இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினையும் நீண்ட காலமாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் விஜய் தன்னுடைய ஒரு மனமார்ந்த, உணர்வுப்பூர்வமான பங்களிப்பை செய்ய வேண்டும்.
அதேபோன்றுதான் சொல்லக்கூடிய விடயம், உண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது, அப்பாவி மக்கள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறுதிநாள் கட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. எனவே இந்த நினைவேந்தல் என்பதும் கூட தமிழர்களின் மனங்களில் மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்ற விடயம். எனவே இந்த விடயத்திலும் அவர் அதற்குரிய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த பாதிக்கப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு, ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
![]()