இலங்கை

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஹர்ஷ!;  இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பு 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியின் குழுவொன்று இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ஆய்வாளரும் கலாநிதியுமான ஹர்ஷ டி சில்வா தொடர்பான விடயங்களை மக்களிடையே கொண்டு சென்று இறுதி நேரத்தில் அவரை பொது வேட்பாளராக அறிவிப்பது தொடர்பில் அந்த குழுவினால் முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டிருந்த பேஸ்புக் பதிவொன்று இது தொடர்பான விடயங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பேஸ்புக் பதிவில், தனது எதிர்பார்ப்பு தொடர்பில் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

“எனது குடும்பத்தில் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை. இளைஞனாக இருந்த காலத்திலிருந்தே எனது நாடு குறித்து எனக்கு ஒரு தாகம் இருந்தது. எனது நாடும் ஒரு நாள் உலகில் அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக மாற வேண்டும், அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்ற உணர்வே என்னை அரசியலுக்குத் தள்ளியது. இன்றும் அந்த உணர்வு அப்படியே உள்ளது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நான் உழைக்கிறேன்.

எனவே, குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நான் எந்தவொரு அரசியல் முடிவையும் எடுக்கப்போவதில்லை. என்னை மத்திய வலதுசாரி முகாமில் இருந்து வெளியேற்றச் சிலருக்குத் தேவை இருப்பதாகத் தெரிகிறது. அது ஒருபோதும் நடக்காது. அந்த முகாமிற்கு ஒரு நாள் தலைமைத்துவத்தை வழங்குவேன். அதுவரை எனது அரசியல் பயணம் தொடரும். தேவையான தருணத்தில் நாட்டிற்காக எந்தவொரு பாரிய சவாலையும் பொறுப்பேற்க நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்துகிறேன். நாட்டிற்கு ஒரு புதிய யுகம் தேவை என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button