கவிதைகள்
நண்பனும் நாமே எதிரியும் நாமே!… கவிதை… ஜெயராமசர்மா

நண்பனும் நாமே எதிரியும் நாமே
புண்பட உரைத்தால் எதிரியாய் ஆவோம்
பண்பட உரைத்தால் நண்பனாய் மாறுவோம்
எண்ணங்கள் வழியில் மாறியே நிற்கிறோம் !
சிரித்திடும் வேளை நண்பனாய் இருப்போம்
சீறிடும் வேளை எதிரியாய் மாறுவோம்
எல்லா நிலைக்கும் நாமே பொறுப்பு
என்பதை எண்ணினால் வியப்பாய் இருக்கு !
எல்லாம் இருப்பது எங்களின் மனத்தே
எங்களின் மனத்தைத் திருத்துதல் முக்கியம்
எங்களின் மனத்தைத் திரித்திட முனைந்தால்
எல்லாம் சிறப்பாய் ஆகியே நிற்கும் !
எல்லாம் சிறப்பாய் ஆகியே நின்றால்
இனிமை இன்பம் இணைந்தே நிற்கும்
இனிமை இன்பம் இணைந்தே நின்றால்
அதுவே அமைதி ஆனந்தம் ஆகும் !
ஆனந்தம் அமைதி அமைந்திட வேண்டி
நாளும் பொழுதும் நம்மையே மாற்றுவோம்
கோளும் நாளும் நம்மை அணுகா
குறைவிலா இறையை இருத்துவோம் இதயம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()