உலகம்

தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள ஈழத்தமிழரின் அரசியல் போராட்டம் – லண்டனில் வரலாற்று நிகழ்வு

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமர்வில், ஈழத்தமிழர் அரசியல் போராட்டம்   தொடர்பான  சட்டரீதியாக வலுவான திட்டம் ஒன்று பிரித்தானிய அரசியல் அமைப்புக்கும் பரந்த சர்வதேச சமூகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமர்வில், மூத்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், புகழ்பெற்ற ஈழத்தமிழ் கல்வியாளர்கள், தாயகத்திலிருந்து வருகை தந்த மதகுரு, மற்றும் தமிழ் சமூக அமைப்புகளும், இளைஞர்களும், ஈழத்தமிழரின் அரசியல் போராட்டம் ஒரு புதிய மற்றும் தீர்க்கமான கட்டத்தில் நுழைந்திருக்கிறது என்பதை உலகுக்கு அறிவிப்பதற்காக ஒன்றுகூடினர்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, வெறுமனே ஒரு நினைவு விழாவாக மட்டும் அமையவில்லை. அது ஒரு உறுதிப்பிரகடனம்.

தமிழ் அரசியல் வரைவு — தமிழ் தேசிய கேள்விக்கு நீதியான, மற்றும் நிலையான தீர்வை வழங்கும் ஒரு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, சட்டரீதியாக வலுவான திட்டம் பிரித்தானிய அரசியல் அமைப்புக்கும் பரந்த சர்வதேச சமூகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் முன்னெடுப்புகள் புதியவை அல்ல. ஆனால் இந்த முன்னெடுப்பு புதியது.முதல் முறையாக, ஒரு ஒற்றை கட்டமைப்பு, அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

எமது தாயகத்தில் இருபத்தி நான்கு சமூக கூட்டங்கள், இரண்டு பெரிய சிவில் சமூக மன்றங்கள், தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களுடன் விரிவான ஆலோசனைகள், மற்றும் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை முப்பதுக்கும் மேற்பட்ட புலம்பெயர் சமூக கூட்டங்கள் என்று, வரலாற்று ரீதியாக தமிழர் அரசியல் நிலைப்பாடுகளைப் பிளவுபடுத்திய ஒவ்வொரு வேறுபாடுகளையும் தாண்டி, இது பரிசோதிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக உருவாகியுள்ள இந்தக் வரைவு தமிழ் தேசத்திற்குச் சொந்தமானது.

மாவீரர்களுக்கும், எமது மக்களுக்கு எதிராக இலங்கை பல தசாப்தங்களாக மேற்கொண்ட அடக்குமுறைகளில் உயிரிழந்தவர்களுக்கும் அனைவரும் தலைசாய்த்து அக வணக்கம் செலுத்தி இந்த ஒன்றுகூடல் தொடங்கியது. இந்தப் பணி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற யதார்த்தத்தில், அதன் பின்னர் நடைபெற்ற அனைத்தையும் ஆழமாகப் பதியச் செய்யும் ஒரு தருணமாக அது அமைந்தது.

அங்கு வெளிப்படுத்தப்பட்ட பரந்தளவிலான அரசியல் ஆதரவே ஒரு வலுவான செய்தியாக அமைந்தது. தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) தலைவருமான ஷிவோன் மெக்டொனா அம்மையார் (Dame Siobhain McDonagh DBE MP) நிகழ்வைத் தொடங்கி வைத்தார் — நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்ற அவர், இந்த முன்னெடுப்பிற்குத் தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தது தற்செயலானதல்ல. பிரித்தானிய அரச இயந்திரம்    இப்போது எந்த அளவிற்கு தீவிரத்தன்மையுடன் இந்தக் கட்டமைப்பைக் கையாள்கிறது என்பதை இது பிரதிபலிக்கிறது.

 

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றத் துணை ஒருங்கிணைப்பாளர் ககன் மொஹிந்திரா (The Hon Gagan Mohindra MP), கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார். தமிழர் அரசியல் கட்டமைப்புக்கான ஆதரவு என்பது வெறும் தொழிற்கட்சி அல்லது லிபரல் கட்சியின் நிலைப்பாடு மட்டுமல்ல என்பதை தெளிவுபடுத்திய அவர்,  இது கட்சிப் பேதமற்ற ஒரு பிரித்தானிய நாடாளுமன்ற நிலைப்பாடாகும் என்று கூறினார்.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரும், தமிழர்களுக்கான நீதிக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களில் ஒருவருமான  பாப் பிளாக்மன் (The Hon Bob Blackman MP) தெரிவிக்கையில், இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்குச் சாத்தியமானதும் கொள்கைப் பிடிப்புள்ளதும் என்று விவரித்தார். அவர் தனது முழுமையான ஆதரவை வழங்கியதோடு, பொறுப்புக்கூறலுக்கான தனது நீண்டகாலக் கோரிக்கைகளையும் மீண்டும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்திலிருந்து பலமுறை எழுப்பிய அந்தக் கோரிக்கைகளை தான் ஒருபோதும் தளர்த்திக்கொண்டதில்லை என்றும் கூறினார்.

இலண்டன் சிட்டி  பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு அரசியல் துறையின் இணைப் பேராசிரியரும் PEARL அமைப்பின் நிர்வாக இயக்குனருமான  கலாநிதி மதுரா ராசரத்தினம் தெரிவிக்கையில்,

தமிழர் சுயநிர்ணய உரிமையின் அரசியல் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து உரையாற்றினார். இது ஒரு புதிய அல்லது சந்தர்ப்பவாதக் கோரிக்கை அல்ல, மாறாகப் பல தசாப்த கால ஜனநாயக வெளிப்பாட்டிலும் சட்டக் கோட்பாட்டிலும் வேரூன்றிய ஒன்று என்பதை அவர் நிரூபித்தார்.

திருகோணமலை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயரான பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் இந்த ஒன்றுகூடலில் உரையாற்றுவதற்காகவே தாயகத்திலிருந்து வருகை தந்திருந்தார். அவரது பிரசன்னமே ஒரு பெரும் கனதியைக் கொண்டிருந்தது. அவரது வார்த்தைகள் அதைவிட அதிக ஆழத்தைக் கொண்டிருந்தன.

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களின் வாழ்வாதார யதார்த்தம் — இராணுவமயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர், உடைமையிழப்பு, நாட்டை விட்டு வெளியேறித் திரும்பி வராத இளைஞர்கள் — குறித்துப் பேசிய அவர், இவற்றை நேரில் கண்ட ஒருவரின் அதிகாரத்தோடு சுயநிர்ணய உரிமைக்கான தார்மீக நியாயத்தை முன்வைத்தார்.

பிரித்தானிய   நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஈழத்தமிழரும், வெளிவிவகாரத் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான உமா குமரன், மக்கள் தங்களது சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை குறித்தும், அதை உறுதிப்படுத்தும் ஜனநாயக முன்னுதாரணங்கள் குறித்தும் உரையாற்றினார்.

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டங்களை நினைவு கூர்வதற்காகவும் அவர் சற்று நேரம் எடுத்துக்கொண்டார். புலம் பெயர் தமிழர்கள் கடும் குளிரிலும் நின்று, தங்களை ஓரங்கட்ட அனுமதிக்க மறுத்த ஒரு தருணம் அது — மேலும், அதன் பின்னரான ஆண்டுகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சளைக்காத, ஆரவாரமற்ற பரப்புரைகளையும் அவர் பாராட்டினார். அந்தப் போராட்டங்களுக்குக் காரணமான அதே விடுதலைப் போராட்டமே இந்தக் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தகைசால் பேராசிரியரும், இலண்டன் பொருளியல் பல்கலைக்கழகத்தின் (LSE) பேராசிரியருமான பேராசிரியர் முத்துகுமாரசுவாமி சொர்ணராஜா தெரிவிக்கையில், சர்வதேச சட்டப் புலமையின் முழுமையான வலிமையை அங்கு வெளிப்படுத்தினார்.

1958 கலவரங்கள் முதல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை தமிழர் கோரிக்கையின் நிலைத்தன்மையை அவர் சுட்டிக்காட்டினார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைதிப் பேச்சுவார்தைகளின்போது சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (ISGA) முன்மொழிவுகளை உருவாக்குவதில் தனது சொந்தப் பங்கு குறித்தும் அவர் பேசியதோடு, தற்போதைய கட்டமைப்பை அந்தப் பிரிக்க முடியாத, சட்ட, மற்றும் அரசியல் பாரம்பரியத்திற்குள் நிலைநிறுத்தினார்.

சர்வதேச சட்டத்தில் உலகின் தலைசிறந்த அதிகாரபூர்வ நிபுணர்களில் ஒருவர் இக்கட்டமைப்பின் சட்ட அடிப்படையை அங்கீகரிக்கும் போது, அது வெறும் அடிக்குறிப்பு அல்ல. மாறாக, அது ஒரு அச்சாணி.

முன்னெடுப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரான கஜன் ராஜ் தெரிவிக்கையில்,

இதுவரையில் செய்யப்பட்ட பணிகள், கட்டமைப்பின் தன்மை மற்றும் எதிர்காலப் பாதை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை தந்தார்  — பல மாதங்களாகக் கடும் சிரமத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட கருத்தொற்றுமையை, தமிழ் சமூகமும் சர்வதேச சமூகமும் இந்த முன்னெடுப்பைப் பொறுப்புக்கூறக் கோரக்கூடிய ஒரு பகிரங்கமான வழிவரைபடம் என அவர் தெரிவித்தார்.

அரங்கை நிரப்பியிருந்த சமூக அமைப்புகள், பரப்புரையாளர்கள் மற்றும் அடுத்த தலைமுறை இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் எனப் பார்வையாளர் வரிசையிலிருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அனைத்துப் பேச்சாளர்களும் நேரடியாகப் பதிலளித்த ஒரு விரிவான கேள்வி-பதில் சுற்றுடன் இந்த அமர்வு நிறைவடைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button