முச்சந்தி

ஈரானை தாக்கிய ஐக்கிய அரபு அமீரகம்: வளைகுடாவை அதிரவைக்கும் புதிய பதற்றம்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தம் சாத்தியப்படுமா என்ற சந்தேகம் உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஈரான் மீது நேரடி தாக்குதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், மத்திய கிழக்கின் இராணுவ – அரசியல் நிலைமை மீண்டும் ஆபத்தான திருப்பத்தை நோக்கி நகர்கிறது)
மத்திய கிழக்கு அரசியலில் மிகவும் சிக்கலான உறவுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு தொடர்ந்து நீடிக்கிறது. ஒருபுறம் வணிகம், கடல் வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் பரஸ்பர சார்புடன் செயல்படுகின்றன. மறுபுறம் பாதுகாப்பு, மத அரசியல், பிராந்திய ஆதிக்கப் போட்டி மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணிகளின் தாக்கம் ஆகிய காரணங்களால் இடையறாத நம்பிக்கையின்மையும் மோதல் சூழலும் நீடித்து வருகின்றன.
ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தம் சாத்தியப்படுமா என்ற சந்தேகம் உள்ள நிலையில், மத்திய கிழக்கின் இராணுவ – அரசியல் நிலைமை மீண்டும் ஆபத்தான திருப்பத்தை நோக்கி நகர்கிறது. உலக பொருளாதாரத்தின் இதயமாகக் கருதப்படும் வளைகுடா பிராந்தியத்தில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஈரான் மீது நேரடி தாக்குதலை மேற்கொண்டதாக வெளிவரும் தகவல்கள், சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஈரானின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்றான லாவன் தீவு (Lavan Island) தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுவது, இந்த மோதலை சாதாரண இராணுவ நடவடிக்கையாக அல்லாமல், உலக எரிசக்தி பாதுகாப்பைத் தாக்கக்கூடிய புதிய கட்டமாக மாற்றியுள்ளது.
லாவன் தீவு என்பது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி அமைப்பில் மிக முக்கியமான இடமாகும். பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தத் தீவு, ஈரானின் பத்தாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி மையமாகக் கருதப்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் இங்கிருந்து உலக சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இத்தகைய முக்கியமான இடம் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானவுடன், உலக எண்ணெய் சந்தைகளில் பதற்றம் அதிகரித்தது. எண்ணெய் விலைகள் உயரக்கூடும் என்ற அச்சமும் எண்ணெய் முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது.
முரண்பாட்டின் வரலாறு:
1971 ஆம் ஆண்டு UAE உருவான காலத்திலிருந்தே ஈரானுடன் எல்லை மற்றும் தீவுகள் தொடர்பான பிரச்சினைகள் எழுந்தன. குறிப்பாக பாரசீக வளைகுடாவில் உள்ள அபு மூசா (Abu Musa), பெரிய துன்ப் (Greater Tunb), சிறிய துன்ப் (Lesser Tunb) ஆகிய மூன்று தீவுகளின் கட்டுப்பாட்டை ஈரான் கைப்பற்றியது.
ஆனால் இத்தீவுகள் UAEயின் உரிமைப் பகுதிகள் என அமீரகம் தொடர்ந்து வாதிடுகிறது. இந்த தீவுகள் பிரச்சினை இரு நாடுகளுக்கிடையேயான அடிப்படை அரசியல் பிணக்காகவே இன்னும் நீடிக்கிறது. அதேசமயம், ஈரான் தனது பாதுகாப்பிற்கும் கடல் ஆதிக்கத்திற்கும் அவை அவசியமானவை எனக் கூறுகிறது.
இவ்வாறு வளைகுடாவில் ஈரான் – UAE உறவு வரலாற்றிலேயே சிக்கலான ஒன்றாகும். வெளிப்படையாக பொருளாதார உறவுகளை பேணினாலும், பிராந்திய ஆதிக்கம், கடல்சார் பாதுகாப்பு, யேமன் போர், அமெரிக்காவுடன் உள்ள உறவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக மோதல்கள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் UAE வலுப்படுத்திய பாதுகாப்பு உறவுகள், ஈரானுக்கு நீண்டகால பாதுகாப்பு அச்சமாக இருந்து வருகிறது.
அமெரிக்க இஸ்ரேல் உறவு:
UAE, அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்க இராணுவ தளங்கள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஆயுத கொள்முதல்கள் மூலம் இரு நாடுகளும் நெருக்கமாக உள்ளன.
மேலும், 2020 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் UAE “ஆபிரிகாம் ஒப்பந்தம்” (Abraham Accords) என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இது ஈரானுக்கு பெரும் அரசியல் அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் இஸ்ரேலை தனது பிரதான எதிரியாகக் கருதும் ஈரான், வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் நெருங்குவதை பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கிறது.
இதன் பின்னர், UAE மீது ஈரானின் விமர்சனங்கள் அதிகரித்தன. அதேவேளை, UAE தனது பாதுகாப்பு நலன்களுக்காக புதிய கூட்டணிகள் அவசியம் என வலியுறுத்தியது.
தற்போது இந்தத் தாக்குதல் உறுதிப் படுத்தப்பட்டால், அது வளைகுடா அரசியலில் மிகப்பெரிய திருப்பமாகக் கருதப்படும். ஏனெனில் இதுவரை ஈரான் மற்றும் அதன் எதிரிகள் பெரும்பாலும் மறைமுக போர்கள் (Proxy War) சைபர் தாக்குதல்கள் அல்லது மறைமுக நடவடிக்கைகள் மூலமே மோதிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு இறையாண்மை கொண்ட நாடு, நேரடியாக மற்றொரு நாட்டின் முக்கிய எண்ணெய் உள்ளக கட்டமைப்பைத் தாக்குவது என்பது திறந்த மோதலுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பைப் பற்றிய உலகளாவிய கவலையையும் அதிகரித்துள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தின் மிகப்பெரிய பகுதி இந்தக் கடல் வழியே நடைபெறுகிறது. இங்கு ஏதேனும் போர் நிலை உருவானால், அதன் தாக்கம் மத்திய கிழக்கைத் தாண்டி ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரை சென்றடையும். குறிப்பாக எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் நேரடியாக பொருளாதார அதிர்வை சந்திக்கக்கூடும்.
இதனிடையே, சர்வதேச சமூகம் மிகுந்த கவலையுடன் நிலைமையை கவனித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உடனடி பதற்றக் குறைப்பை வலியுறுத்தக்கூடும். ஏனெனில் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு பெரிய போரும், ஏற்கனவே பல்வேறு போர்களால் சோர்வடைந்த உலக அரசியல் அமைப்பை மேலும் நிலையற்றதாக்கும் அபாயம் உள்ளது.
மத அரசியல் – பிராந்திய முரண்:
ஈரான் ஒரு ஷியா இஸ்லாமிய குடியரசாக செயல்படுகிறது. UAE உட்பட பல வளைகுடா அரபு நாடுகள் சுனி மத வட்டாரத்துடன் இணைந்திருக்கின்றன. இந்த மத அரசியல் வேறுபாடு பிராந்திய அதிகாரப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியது.
ஈராக், சிரியா, லெபனான், யேமன் போன்ற நாடுகளில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்தபோது, UAE அதனை பிராந்திய ஆதிக்க முயற்சியாகக் கண்டது. குறிப்பாக யேமன் உள்நாட்டுப் போரில், ஈரான் ஆதரவு பெற்ற ஹூவுதி இயக்கத்திற்கு எதிராக சவுதி அரேபியாவுடன் இணைந்து UAE இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் மூலம் ஈரான்–UAE உறவு வெறும் இருதரப்பு உறவாக இல்லாமல், மத்திய கிழக்கு அதிகார சமநிலையின் ஒரு பகுதியாக மாறியது.
பொருளாதார உறவின் வலிமை
ஆனாலும் நீண்டகாலமாக அரசியல் முரண்பாடுகள் இருந்த போதிலும், பொருளாதார ரீதியில் இரு நாடுகளும் பல ஆண்டுகளாக நெருக்கமாக இணைந்திருந்தன. குறிப்பாக துபாய் நகரம், ஈரானிய வணிகர்களின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது.
அணுஆயுத திட்டத்தால் அமெரிக்க தடைகள் காரணமாக உலக சந்தைகளில் சிக்கியிருந்த ஈரான், UAE வழியாக பல பொருட்களை இறக்குமதி செய்து வந்தது. ஆயிரக்கணக்கான ஈரானிய வணிகர்கள் துபாயில் தொழில் செய்து வருகின்றனர். வங்கிகள், கப்பல் போக்குவரத்து, தங்க வணிகம், மறைமுக வர்த்தகம் போன்ற துறைகளில் இந்த உறவு பலமாக இருந்தது. இதனால், அரசியல் பதற்றங்கள் அதிகரித்த காலங்களிலும் முழுமையான உறவுத் தடை ஒருபோதும் உருவாகவில்லை.
அதேவேளை, தகவல் போரின் (Information War) காலத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மையையும் கவனமாக அணுக வேண்டியுள்ளது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் இல்லாத சூழலில், சமூக ஊடகங்கள் மற்றும் பிராந்திய ஊடகங்களில் பரவும் தகவல்கள் சில நேரங்களில் உளவியல் போர் அல்லது அரசியல் அழுத்தத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். எனவே, உண்மை நிலைமை முழுமையாக வெளிப்படுவதற்கு முன்னர், உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகுகின்றன.
எதுவாயினும், லாவன் தீவைச் சுற்றியுள்ள இந்தச் சம்பவம் வளைகுடா பிராந்தியம் இன்னும் தீப்பொறி சூழலில்தான் இருப்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு சிறிய தாக்குதலும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மத்திய கிழக்கு இன்று மிகவும் நுணுக்கமான நிலைமையில் உள்ளது. அமைதி மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மட்டுமே இந்தப் பதற்றத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வழியாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button