முச்சந்தி

கபிலவின் மரணம் குறித்த விசாரணைக்கு மற்றொரு தடை!; சி.சி.ரி.வி. கமராக்கள் இயங்கியும் காட்சிகள் இல்லை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், அவர் உயிரிழந்த இடத்தில் இருந்த சிசிரிவி கமராக்கள் இயங்கிய போதிலும், காட்சிகள் எவையும் பதிவாகவில்லை என கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று (14) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது ஆறு சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்தனர்.

முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே உயிரிழந்திருந்தார்.

அந்த இல்லத்தில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டு, அவை இயங்கு நிலையில் இருந்த போதிலும், நீண்டகாலமாக அதில் காட்சிகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை (Recording) என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதவானுக்குத் தெரிவித்தனர்.

இதனால் மரணம் நிகழ்ந்த இடத்தின் காட்சிகள் எவையும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

எனினும், உயிரிழந்தவர் தங்கியிருந்த இல்லத்திற்குச் செல்லும் மற்றும் வெளியேறும் வழிகளைக் கொண்ட அயல் வீடுகளின் சிசிரிவி பதிவுகள் அனைத்தும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

கடந்த மே 12 ஆம் திகதி, நீதிமன்ற அனுமதியுடன் உயிரிழந்தவருக்குச் சொந்தமான மற்றுமொரு இல்லத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இதன்போது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button