உலகம்

வத்திக்கான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

பழமைவாத லத்தீன் திருப்பலியை (Latin Mass) கடைப்பிடிக்கும் கத்தோலிக்க குழு ஒன்று, திருத்தந்தை லியோவின் அனுமதியின்றி புதிய ஆயர்களை நியமிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வத்திக்கான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீறினால், 1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையிலிருந்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட தூய பத்தாம் பத்திநாதர் சங்கம் (Society of St. Pius X) என்ற குழுவிற்கும் வத்திக்கானுக்கும் இடையே நீண்டகாலமாக விரிசல் இருந்து வருகிறது.

வத்திக்கான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Vatican Warns Rebel Catholic Group

வத்திக்கானின் கோட்பாட்டு அலுவலகத் தலைவர் கர்தினால் விக்டர் பெர்னாண்டஸ் விடுத்துள்ள அறிக்கையில், திருத்தந்தையின் அனுமதியின்றி ஆயர்களை நியமிப்பது ஒரு “பிளவை” (Schism) உருவாக்கும் என்றும், இது இறைவனுக்கு எதிரான பாரதூரமான குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழு 1960-களில் திருச்சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த ‘இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்’ முக்கிய போதனைகளை நிராகரிக்கிறது.

குறிப்பாக, லத்தீன் மொழியில் மட்டுமே நடந்து வந்த திருப்பலியை உள்ளூர் மொழிகளில் நடத்த அனுமதித்த மாற்றத்தை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படும் மிகக் கடுமையான தண்டனை இதுவாகும். சபை நீக்கம் செய்யப்பட்டவர் திருச்சபையிலிருந்து முற்றிலுமாக பிரிக்கப்பட்டவராகக் கருதப்படுவார்.

அவர்களால் திருவருட்சாதனங்களைப் பெறவோ அல்லது திருச்சபை பதவிகளை வகிக்கவோ முடியாது. மனம்மாறி மன்னிப்பு கேட்காதவரை, இறந்த பிறகு அவர்களுக்கு கத்தோலிக்க முறைப்படி அடக்கம் செய்யப்பட மாட்டாது.

திருச்சபையின் விதிகளின்படி, இயேசுவின் 12 சீடர்களுடனான தொடர்பைப் பேணுவதற்காக, புதிய ஆயர்களை நியமிக்கும் அதிகாரம் திருத்தந்தைக்கு மட்டுமே உள்ளது.

திருத்தந்தை லியோவின் பதவிக்காலத்தில், திருச்சபையின் மிகக் கடுமையான தண்டனை குறித்த எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button