கதி கலங்கும் உக்ரைன்! 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா சரமாரித் தாக்குதல்

உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து, ரஷ்யா நடத்திய பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா முன்னெடுத்த மூன்று நாள் போர்நிறுத்தம் கடந்த திங்கட்கிழமை முடிவுக்கு வந்த நிலையில், அதன்பிறகு நடத்தப்பட்ட இந்த பாரிய தாக்குதலால் உக்ரைன் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலைநிறுத்தப்பட்ட போர் விமானங்கள்
இந்தத் தாக்குதலின் போது எல்லைப் பாதுகாப்பைக் கருதி நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் போலந்து நாடு தனது போர் விமானங்களை அவசரமாக நிலைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உக்ரைனில் ஹங்கேரிய இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலுக்கு ஹங்கேரி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பாக ரஷ்ய தூதருக்கும் அழைப்பாணை விடுத்துள்ளது.
800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்
அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில், ரஷ்யா இவ்வளவு பெரிய தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியிருப்பது தற்செயலானது அல்ல என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

நள்ளிரவு முதல் ரஷ்யா சுமார் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளதாகவும், குறிப்பாக நேட்டோ நாடுகளின் எல்லைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளையே ரஷ்யா குறிவைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()