குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் கொலை; குமுதினிப் படகு படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை

குமுதினிப் படகு படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை யாழ் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப் பிள்ளையார் ஆலயம், நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்தியத் திருச்சபை ஆலயம், நெடுந்தீவு தேவசபை ஆலயம் ஆகிய ஆலயங்களில் , உயிரிழந்த அனைத்து உறவுகளினதும் ஆத்மசாந்திக்கான வழிபாடுகள் சம நேரத்தில் நடைபெறும்.
தொடர்ந்து காலை 9.15 மணியளவில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.
15.05.1985 காலை நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப் படகு இலங்கைக் கடற்படையினரால் நடுக் கடலில் வழிமறிக்கப்பட்டு அதில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இவர்களை நினைவு கூரும் வகையிலே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![]()