இலங்கை

இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வாக்குமூலம் ராஜபக்‌ஷக்களை நடுங்க வைத்த விசாரணை!

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார் பஸ் கொள்வனவின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் வாக்குமூலமளித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்ற மகிந்த ராஜபக்‌ஷ, முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறி சென்றார்.

மகிந்த ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்த போது, அவரின் பெருமளவான ஆதரவாளர்கள் அந்த ஆணைக்குழுவுக்கு முன்னால் கூடியதால் அந்தப் பகுதியிலுள்ள வீதிகளில் வாகன போக்குவரத்துக்கள் சில மணிநேரம் தடைப்பட்டிருந்தன. இதன்போது அங்கு முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் ஆணைக்குழு வளாகத்தில் இருந்தனர்.

இதேவேளை மகிந்த ராஜபக்‌ஷவுக்கு சார்பாக சட்டத்தரணிகள் பலரும் இலஞ்ச ஊழல் விசாரணை வளாகத்திற்கு சென்றிருந்தனர்.

அந்தப் பகுதியில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியதுடன், மகிந்தவை கைது செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் கூறினர்.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்காக 6 எயார்பஸ் ஏ-330 ரக விமானங்களையும் மற்றும் 8ஏ -350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்யும் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதன்போது, எயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் ஊடாக இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை சந்தேக நபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

அதன்படி, 2015 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தலா 20 மில்லியன் ரூபா வீதம் மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 60 மில்லியன் ரூபாவை பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இருப்பினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கபில சந்திரசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி , இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியதுடன், அது தொடர்பான சத்தியக்கடதாசியையும் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலைமையில் கடந்த 8 ஆம் திகதி இந்த விசாரணையின் முக்கிய சந்தேக நபரான ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய அவர்கள் இருவரும் நேற்று ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button