இலங்கை

மக்கள் கூட்டு எதிர்க்கட்சியிடமிருந்து பிரதம நீதியரசருக்கு மகஜர்

மே தின மேடையில் நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரி, மக்கள் கூட்டு எதிர்க்கட்சி பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அதன் அழைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அது குறித்த விபரங்களை அந்த நீதிபதி மட்டுமே அறிவார் எனவும், அதனை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற வகையில் தலையிடுவது மிகவும் பாரதூரமான குற்றமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

”மஹரகமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மே 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் தீர்ப்பு மே 25ஆம் திகதி கிடைக்கும் என மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அந்தத் தீர்ப்பை கைதட்டி வரவேற்கத் தயாராக இருக்குமாறும் அவர் கூறியிருந்தார். ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அதனை ஒரு நபர் மட்டுமே அறிவார், அது அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மட்டுமே.

அந்தத் தீர்ப்பை மூன்றாம் தரப்பினருக்குக் கூற அவருக்கு எந்த உரிமையும் இல்லை, அது குறித்து ஆலோசிக்கவும் முடியாது. நீதிமன்ற நடவடிக்கைகளில் முறையற்ற வகையில் தலையிடுவது என்பது பாரதூரமான குற்றமாகும். அவ்வாறு செய்பவர்களுக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் 5 வருட காலத்திற்குப் பிரஜாவுரிமை பறிபோகும் தண்டனையும் கிடைக்கும்.

எனவே, எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என்ற ரீதியில் பிரதம நீதியரசருக்கு மகஜர் ஒன்றை அனுப்பத் தீர்மானித்தோம். இந்தத் தீவிரமான பிரச்சினை குறித்து அவரது கௌரவமான அவதானத்தைச் செலுத்துமாறு நாங்கள் கூட்டுக்கோரிக்கை விடுக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button