மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் அரசுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்து

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இவ்வாறு வலியுறுத்தினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,
2017ஆம் ஆண்டில் இருந்து மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே முதலாவது வருடத்தில் தேர்தலை நடத்துவதாக கூறினர். ஆனால் 87 காலப்பகுதியில் மாகாண சபை முறைமைக்கு எதிராக இவர்கள் போராட்டங்களை நடத்தினர். இதன்போது எமது கட்சியினர் பலரை கொன்றனர். மிகவும் கஸ்டப்பட்டே மாகாண சபைகள் முறைமையை கொண்டுவந்தோம். இவ்வாறாக 87இல் செய்ததை போன்றே ஜே.வி.பி இப்போது செய்கின்றது. சர்வாதிகார ஆட்சிக்கு போய்க்கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் மாகாண சபைகள் தொடர்பில் தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இது அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன. மூன்று தடவைகள் கூடியும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் பழைய முறையில் தேர்தலை நடத்துவதை சிறிய திருத்தத்தின் மூலம் செய்யலாம். சாதாரண பெறும்பான்மை போதுமானது. அதற்கு நாங்களும் ஆதரவளிப்போம். ஆனால் அந்த செயற்குழுவும் இது தொடர்பில் பதிலளிக்காமல் பின்னடிக்கின்றது. அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சுகின்றது.
ஜனநாயாக விரோதமான முறையில் மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றன. இந்த தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி செயலாளர்கள் கூடி தீர்மானங்களை எடுப்போம் என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவிக்கையில்,
நாட்டில் இறுதியாக 2014ஆம் ஆண்டிலேயே மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அன்றில் இருந்து 12 வருடங்களாக எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் மக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமைக்கான பொறுப்பை அரசாங்கத்தில் இருந்த எந்தக் கட்சியும் ஏற்கவில்லை. மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் 2025 மார்ச் மாதத்தில் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவந்தேன். அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு இரண்டாவது வாசிப்புக்கு தயாராக இருக்கின்றது. இதன்படி மாகாண சபைகள் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு எண்ணம் இருந்தால் பாராளுமன்ற குழு அவசரமாக நாளைய தினமே கூடினால் அடுத்த பாராளுமன்ற வாரத்திலாவது மாகாண சபைகள் சட்டமூலத்தை நிறைவேற்றி மூன்று மாதங்களில் தேர்தலை நடத்தலாம்.
ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் காலத்தை இழுத்தடிக்கும் நோக்கில் தெரிவுக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களில் அது தொடர்பான அறிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். இதன்படி ஜுன் 16, 17ஆம் திகதிகளில் அதன் முதலாவது அறிக்கையை முன்வைக்க வேண்டும். தேவையென்றால் நான் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை எடுத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம். எவ்வாறாயினும் மாகாண சபைகள் தேர்தலை நடத்தாமல் காலத்தை இழுத்தடிப்பதற்கான செயற்பாடுகளே நடக்கின்றன.
தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையென்றால் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான தெரிவுக் குழு மூலம் காலத்தை இழுத்தடிக்காமல் தேர்தலை நடத்த முடியாது, தங்களுக்கு பயம் என்பதனை கூறலாம். அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதனை வெளிப்படுத்த வேண்டும்.
இதன்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவிக்கையில்,
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தனிநபர் சட்டமூலமொன்றை இராசமாணிக்கம் எம்.பி கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை கொண்டுவந்துள்ளனர். மீண்டும் எல்லை நிர்ணயத்திற்கு செல்லாமல் இராசமாணிக்கம் எம்.பியால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்தை கவனத்தில் எடுக்கலாம்.
இந்த அரசாங்கம் உண்மையிலேயே அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆதவை தெரிவிக்க தயாராக இருக்கின்றனரா? இவர்கள் 88 காலத்தில் இந்த அதிகார பரவாலகத்திற்கு எதிராக இருந்தவர்கள் இப்போது மாறிவிட்டனர். அதிகார பரவலாக்கத்திற்கு தயார், அரசியலமைப்பில் உள்ளவற்றை ஏற்றுக்கொள்கின்றோம் என்றால் தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலை நடத்துவதில் 2017ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேர்தல் முறை மாற்றத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்வதில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் இராசமாணிக்கம் எம்.பி. கொண்டுவந்துள்ள தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 2017க்கு முன்பிருந்த தேர்தல் முறையை பயன்படுத்த வேண்டும். இதனை இடைக்கால விதிமுறையாக கொண்டு வந்து புதிய தேர்தல் எல்லை நிர்ணய முறை பூர்த்தியடையும் வரையில் ஒரு தேர்தலுக்காவது சட்டத்தை கொண்டுவரலாம். உண்மையில் தேர்தலை நடத்த தயார் என்றால் கொண்டுவரலாம் என்றார்.
![]()