இன்னும் பல சாட்சிகள் தற்கொலை செய்யலாம்; முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் .அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களும் சாட்சியாளர்களும் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்வார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பாரிய இரண்டு ஊழல் .மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பேர் கடந்த சில நாட்களுக்குள் தற்கொலை செய்துள்ளனர் . குறிப்பாக திறைசேரியின் 25 இலட்சம் டொலர் தவறான வங்கி கணக்கிற்கு வைப்பிலிட்டதாகத் தெரிவித்து, அரசாங்கம் 4பேரை பணி நீக்கம் செய்திருந்தது. அவர்களில் ஒருவர் தற்போது மர்மமாக உயிரிழந்துள்ளார் . நடந்து ஓரு சில நாட்களுக்குள் எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரதான சாட்சியாளர் கபில சந்திரசேனவும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவங்களை எங்களால் சாதாரண விடயமாக கருத முடியாது. ஏனெனில் மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்குள்ளாகி , அந்த சம்பவத்துக்கு சாட்சியாளர்களாகி இருப்பவர்கள், இவ்வாறு மர்மமாக இறப்பது, தற்கொலை செய்துகொள்வது என்பது பாரிய விடயம். இந்த சம்பவங்களை அரசாங்கம் எந்தளவு பாரதூரமாகப் பார்க்கின்றது என எங்களுக்குத் தெரியாது.
இவ்வாறான சாட்சிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது என்றால் இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் எதுவும் முன் நோக்கி செல்லாது.எனவே சாட்சியாளர்களையும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பவர்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அரசாங்கம் அவர்களை பாதுகாக்கத் தவறினால் அதன் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சாட்சியாளர்களை பாதுகாக்க அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.
அப்படியானால் எதிர்காலத்தில் நிலக்கரி மோசடி சம்பவம் தொடர்பில், நிதி அமைச்சில் இடம்பெற்ற சம்பவம். அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களும் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்வார்களோ என்ற கேள்வி எழுகிறது. அதனால் இவர்களையும் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
அதேநேரம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடுகளையே அரசாங்கம் தற்போது கொண்டுசெல்கிறது. ஆணைக்குழுக்களை சுயாதீன நிறுவனங்களாக பிரகடனப்படுத்தியது நல்லாட்சி அரசாங்கத்திலாகும். அதன் பிரகாரமே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் சட்ட ரீதியிலான இந்த அதிகாரம் கிடைக்கப்பெற்றது. அதனால் சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் குறிப்பாக 323 கொள்கலன் விடுவிப்பு உள்ளிட்ட பல முறைப்பாடுகள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டிருக்கின்றது.அந்த முறைப்பாடுகள் எதுவும் இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதால்தான் அரசியல் தலையீடு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதனால் சுயாதீன நிறுவனம் என்றவகையில், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தால், அது அரச தரப்பா எதிர்த்தரப்பா என பார்க்காமல் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உள்ளது என்றார்.
![]()