இலங்கை

ஐ.தே.க.வும்- ஐ.ம.ச.வும் இன்னும் இணைவில்லை

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதரவாளர்கள் கிராம மட்டங்களில் ஒன்றிணைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், இரு கட்சிகளினதும் தலைவர்களும் உத்தியோகபூர்வமாக இணையும் வரை அது ஒரு வெற்றிகரமான கூட்டணியாக அமையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கண்டி மாவட்டத் தலைவருமான நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைவதற்கு ஒரு பொறிமுறை அவசியமென்றும், அது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இரண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளாக உள்ள நிலையில், இவற்றை ஒன்றிணைப்பதற்கான சரியான பொறிமுறை குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

கட்சி ஆதரவாளர்கள் மட்டத்தில் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பலமான விருப்பம் காணப்படுகின்றது. புள்ளிவிபரங்களின்படி, சுமார் 15 இலட்சம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வெற்றிக்கான வாய்ப்புத் தென்படாத காரணத்தினால் வாக்களிக்காமல் உள்ளனர். இவர்களை மீண்டும் தேர்தல் களத்திற்குக் கொண்டுவர வேண்டுமாயின் இரு கட்சிகளும் ஒன்றிணைவது கட்டாயமாகும். சுமார் 35 இலட்சம் பழைய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிதறிக் காணப்படுகின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டுமாயின், அவர்களின் வாக்குகள் இன்றி அது சாத்தியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த நவீன் திசாநாயக்க, பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அரசாங்கத்திடம் முறையான பொருளாதார முகாமைத்துவமோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களோ இல்லையெனவும் குற்றம் சாட்டினார். ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பிய போதிலும், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கிறது.

தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான வற் (VAT) வரி குறைக்கப்படவில்லை.
தற்போது நாட்டின் வருமானம் அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கு மேலதிக வரிச் சலுகைகளை வழங்க வேண்டும். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் பழிவாங்கும் நோக்குடன் சட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. இது ஜனநாயக நாட்டிற்குப் பொருத்தமற்றது என்றும் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், மத்திய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தாம் அதில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button