இலங்கை

தையிட்டிக்குள் புதிய நெருக்கடி உருவாகிறது; பொலிஸார் வழக்குத் தாக்கல்

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை வலி. வடக்கு பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தனியார் காணிகள் , பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என்பவற்றை அடாத்தாக கையகப்படுத்தி தையிட்டி பகுதியில் அனுமதிகள் எதுவுமின்றி விகாரை கட்டப்பட்டுள்ளது.

இந்த விகாரைக்காக கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் போராட்டங்களை நடாத்தி வரும் நிலையில் , கடந்த 28ஆம் திகதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி , காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன் போது காணி உரிமையாளர்கள் , “காணிகளை விடுவிக்கவே அளவீடு செய்கிறோம்” என எழுத்தில் உறுதி மொழி கேட்ட நிலையில் , நீண்ட இழுபறிகளின் பின்னர் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில் , விகாரைப் பகுதிக்குள் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை அளவீடு செய்ய தவிசாளர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, வீதி அளவீடு செய்யப்பட்டது.

இதனை அடுத்து, அந்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை இன்று திங்கட்கிழமைக்கு முன்னர் அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பிரதேச சபை அந்த வேலியை அகற்றும் , வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸில் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவே வேலியை அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர்.

அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாகக் கூறி இருந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை வலிகாமம் வடக்கு பிரதேச சபை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் எனவும் பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரை இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

வழக்கு விசாரணைகளில் தவிசாளர் முன்னிலையாக உள்ள நிலையில் , வேலியை அகற்றுவது தொடர்பில் நீதிமன்று முக்கிய அறிவித்தலை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button