உலகம்

எரிசக்தி சந்தை பாரிய நெருக்கடியில்: சவூதி அராம்கோ எச்சரிக்கை!

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், சுமார் ஒரு பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உலகச் சந்தைக்கு வழங்கும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, எரிசக்தி சந்தை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (10) விசேட அறிவிப்பொன்றை விடுத்த அமீன் நாசர், எண்ணெய் விநியோகப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சந்தை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு கணிசமான காலம் எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க – இஸ்ரேல் போருடன் ஏற்பட்ட பதற்றமான சூழலில், ஈரானால் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டமை உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உலகச் சந்தையில் எண்ணெய் விலையும் வேகமாக அதிகரித்துள்ளது.

“விநியோகப் பாதைகளை மீண்டும் திறப்பதும், ஒரு பில்லியன் பீப்பாய்களை இழந்த சந்தையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதும் இரண்டு வெவ்வேறு விடயங்கள்,” என நாசர் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து, செங்கடல் ஊடாக கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக அராம்கோ நிறுவனம் தனது “கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை” பயன்படுத்துவதாகவும், உலகளாவிய விநியோக நெருக்கடியைக் குறைப்பதில் இது தீர்க்கமான பங்கை வகிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும், அராம்கோ நிறுவனம் தனது முதலாம் காலாண்டில் நிகர இலாபத்தில் 25% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விநியோகப் பாதைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆசிய பிராந்தியமே இன்னும் தமது நிறுவனத்தின் பிரதான இலக்காகவும் உலகளாவிய தேவையின் மையப்புள்ளியாகவும் விளங்குவதாக நாசர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button