முச்சந்தி

உழ்ஹிய்யா குர்பான் கடமையில் இனரீதியாக பாரிய பிரச்சினை ஏற்படுவதைத் தடுத்த அரசு நன்றி தெரிவிக்கும் நிசாம் காரியப்பர் 

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் புனித கடமையான உழ்ஹிய்யா குர்பான் கடமையை மேற்கொள்ளும்போது இனவாதிகள் அதனை பாரிய பிரச்சினையாக்குவதற்கு இடமிருந்த நிலையில்,உழ்ஹிய்யா குர்பான் கடமைக்கு அனுமதியளித்து சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்காக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் சந்தன அபேவர்த்தனவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சட்ட அதிகாரத்துடனான அலகு ஒன்றை தாபித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்தமுறை வெசாக் பண்டிகை வாரமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் இரண்டாம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம் எதிர்வரும் 28ஆம் திகதி முஸ்லிம்களின் தியாகத்திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் ஹஜ்ஜுப் பெருநாளில் முக்கிய கடமையாகிய உழ்ஹிய்யா எனும் குர்பான் கடமையை மேற்கொள்ள முடியாமல் போகுமா என்ற பாரிய சந்தேகம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

அதேநேரம் இந்த குர்பான் கடமையை அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளும்போது இனவாதிகள் அதனை பாரிய பிரச்சினையாக்குவதற்கும் இடமிருந்த நிலையில், உள்ளூராட்சிமற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் இதுதொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை ) சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் வெசாக் பண்டிகை வாரமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் இரண்டாம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும், எதிர்வரும் 30 மற்றும் 31ஆகிய இரண்டு தினங்களில் மாத்திரம் மிருகங்கள் அறுப்பதும் இறைச்சிக்கடைகள் திறப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக இந்த அரசாங்கத்துக்கும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேநேரம் சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது. இரண்டு மாதங்களுக்குள் அதன் எல்லையை நிர்ணயித்து, நகரசபை ஒன்றுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. அதனால் அந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button