இலங்கை

சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் -டெண்டர் முறைகேடுகள் குறித்து டிலான் கடும் எச்சரிக்கை!

இலங்கை அரசின் முறைகேடான டெண்டர் நடைமுறைகள் மற்றும் ஊழல்கள் காரணமாக, சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகளைக் கடுமையாகச் சாடினார்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் கடவுச்சீட்டு தட்டுப்பாட்டுக்கு அரசின் தன்னிச்சையான தீர்மானங்களே காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டார்.

“ஈ-கடவுச்சீட்டு அச்சிடுவதற்காக விண்ணப்பித்திருந்த தகுதியான போலந்து நாட்டு நிறுவனம் உட்பட ஆறு சர்வதேச நிறுவனங்கள் எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.

தகுதியான நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டு, அரசுக்கு நெருக்கமான ஒருவருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க திரைமறைவு வேலைகள் நடக்கின்றன.” என்றும்அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த டெண்டர் நடைமுறையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து, போலந்து அரசு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் புகாரளிக்கத் தயாராகி வருகின்றது என்றும் டிலான் பெரேரா தெரிவித்தார்.

“போலந்து போன்ற நட்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையிட்டால், அது இலங்கையின் சர்வதேச நற்பெயரைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.

“நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இழைக்கும் தவறுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் நடுநிலையாக இல்லை என்றும், பிணைமுறி உள்ளிட்ட நிதி முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை அவர் திசைதிருப்ப முயற்சிக்கின்றது என்றும் டிலான் பெரேரா இதன்போது கடுமையாகச் சாடினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button