இந்தியா

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் இளுபறி நிலையே நீடித்து வருகின்ற நிலையில் ஆளுநரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்தது.

இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்தித்து விஜய் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார்.

புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தவெக.வுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்எல்ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் இரண்டாவது முறையாக வருகை தந்தார். அங்கு ஆளுநரை சந்தித்த அவர் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை அடங்கிய கடிதத்தை சமர்ப்பித்தார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாகவும், விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை, அதனால் சட்ட வல்லுநர்களுடன் அவர் ஆலோசனையில் இருக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை இதற்கிடையில், ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும், தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பதே சரியென்று விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்துள்ளனர். விஜய்யின் கூட்டணி கோரிக்கை பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது.

அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.

எனது சகோதரர் மு.க. ஸ்டாலின், ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.

233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள்.

இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம். ‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, விஜய் பதவியேற்பதற்காக ஏற்பாடுகள் நடந்த நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு தவெக ஆதரவாளர்கள், விஜய் ரசிகர்கள் வந்து செல்வதையும் அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில்; தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரண அரசியல் சூழலைப் பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, ஆளுநர் மாளிகை, தவெக தலைமை அலுவலகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மூன்றடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மெரீனா கடற்கரையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள தவெக கூட்டணியை, ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, பெரும்பான்மை ஆதரவை கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.

இதேவேளை தமிழ்நாடு ஆளுநர் தவெகவை ஆட்சியமைக்க இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கில், மக்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாக வைக்க தவெக திட்டமிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் தலைமையில் சட்ட வல்லூநர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதேநேரம் தவெகவின் எம் எல் ஏக்கலை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து தீவீர ஆலோசனையில் செங்கோட்டையன் ஈடுபட்டார்.

குறிப்பாக நடப்பவைகளை பார்த்து நீங்கள் சோர்ந்துவிட வேண்டாம் இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும் அதுவரை பொறுமை காக்கவும் என அவர் தனது சட்ட மன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது கூட்டணி கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

குறித்த கூட்டத்தில் அனைத்து கூட்டணி தலைவர்களிடம் திமுகவுடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் விஜய் தங்களுடன் கூட்டணி அமைக்க வாருங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ள சூழலில் இவர்கள் இன்னும் இறுதி முடிவுனை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button