இலங்கை

திகதிதான் தெரியும் தீர்ப்பு தெரியாது; அமைச்சர் ஹர்ஷன கூறுகிறார் 

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பற்றி எவரும் குறிப்பிடவில்லை. வழக்கு எண் மற்றும் வழக்கு தினம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு என்னவென்பது எமக்கு தெரியாது. ஆனால் குறித்த வழக்குடன் தொடர்புடைய நபர் நன்கு அறிவார். அதனால் தான் தற்போது திணறுகிறார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி எவரையும் கைது செய்யவில்லை,எவரையும் அச்சறுத்தவுமில்லை. ஆகவே அவசரகால சட்டத்தை நீட்டிப்பதால் எவ்வித பிரச்சினையும் இல்லை.வெண்ணெய் பூசும் கத்தியால் நல்லதை செய்யவும் முடியும், தீமையை செய்யவும் முடியும். கத்தியால் பாணுக்கு வெண்ணெய் பூசவும் முடியும், கொலை செய்யவும் முடியும். சட்டமும் அது போன்றதே, கத்தியை கையில் வைத்திருப்பவரின் எண்ணத்துக்கமையவே செயல்கள் வெளிப்படும்.

சர்வதேச ஊடக சுதந்திர சுட்டெண் தரப்படுத்தலில் இலங்கை முன்னிலையில் உள்ளது. ஊடக சுதந்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் தான் செய்கிறார்கள். சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யுரைக்கிறார்கள்.

அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தில் கை வைப்பதாக எதிர்க்கட்சியினர் தற்போது அரசியல் பிரசாரம் செய்கிறார்கள்.முன்னாள் பிரதம நீதியரசர்களின் வீடுகளுக்கு கல்லெறிந்து மோசமான வகையில் அவர்களை பதவி நீக்கி விட்டு, அவர்களின் வீட்டின் முன்பாக பாற்சோறு சமைத்து சாப்பிட்டவர்கள் தான் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றிப் பேசுகின்றார்கள்.

பல மோசடிகள் குறித்து சுயாதீனமாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன . நீதிமன்றமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வழக்குகள் பற்றி பேசுவதில் என்ன பிரச்சினை உள்ளது? அது நாட்டு மக்களின் தனிப்பட்ட உரிமை . வழக்கு தினத்தை முன்கூட்டியே அறிவிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பற்றி எவரும் குறிப்பிடவில்லை. வழக்கு எண் மற்றும் வழக்கு தினம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுவானதொரு விடயம். வழக்கின் தீர்ப்பு என்னவென்பது எமக்கு தெரியாது. நீதிமன்றமே அறியும். ஆனால் குறித்த வழக்குடன் தொடர்புடைய நபர் நன்கு அறிவார். அதனால் தான் தற்போது திணறுகிறார்கள்.

சட்டத்தின் ஆட்சியை சிறந்த முறையில் செயற்படுத்துகிறோம். எதிர்க்கட்சியில் உள்ள ஒருசிலர் தோற்றுவிக்கும் போலியான மாயை அவர்களையே தொடரும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button