மக்களை ஏமாற்றாது நேர்மையாகச் செயற்பட்டால் வட,கிழக்கு சகல தமிழ் எம்.பி.க்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பார்கள்

மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை கைவிட்டு எப்போது நேர்மையாக செயற்படுவதற்கு அரசாங்கம் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றதோ, அப்போது வடக்கு, கிழக்கில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான வர்த்தமானி மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய உறுப்பினர்கள் அனைவரும் டித்வாவினாலும் மத்திய கிழக்கில் நிலவும் நிலைமையாலும் அவசரகால சட்டத்தை நீடிப்பதாக கூறுகின்றனர்.இவர்கள் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான நியாயப்படுத்தலை குறிப்பிடுகின்றனர். இந்த நேரத்தில் இது அவசியமற்றது. நிலைமையை சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் இவ்வாறு நியாயப்படுத்தலை முன்வைக்க முடியாது. நாட்டில் இப்போது அவசரகால நிலைமை கிடையாது.
மக்கள் உங்களுக்கு எதிராக எழுவார்கள் என்று அச்சப்படுகின்றீர்கள். இதனால் நிர்வாக அலுவலர்களை பரிசீலிக்கின்றீர்கள். இதற்காகதான் இந்த சட்டத்தை நீடிக்கின்றீர்கள். இப்போது அவசரகால சட்டம் அவசியமில்லை. முழு நிலைமையும் மாறிவிட்டது. அவசரகால சட்டத்திற்கு எதிராக நாங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றோம். பாதுகாப்பு தரப்பினரின் மனநிலையில் எந்த மாற்றமும் கிடையாது. வடக்கு, கிழக்கில் மக்களுக்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை. பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் மக்களின் மனநிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.
தீபச் செல்வனின் 350 பிரதிகள் சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இது உண்மையான விடயங்களை எடுத்துக்காட்டும் புத்தகங்களாகும். கலாச்சார பேரவை, பௌத்த கலாச்சார அமைச்சின் விதப்புரையின் கீழ் இது தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தடை செய்வதற்கான காரணம் என்ன? இவ்வாறான கலாச்சாரமே உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மனநிலைகளில் மாற்றம் ஏற்படவில்லை. புத்தகத்தில் எந்தப் பகுதி பிரச்சினைக்குரியது என்றும் குறிப்பிடவில்லை. எனவே அவர்கள் எவ்வாறு இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இந்த விடயத்தை நீங்கள் சரியாக கையாள வேண்டும். இந்த புத்தகங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்.
அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டம் அனைத்தையும் மாற்ற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறுகின்றீர்கள். இது முழுமையாக பிழையான விடயமாகும். மற்றைய தரப்பினர் எவ்வாறு உணர்கின்றனர் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஏன் அதனை மறுக்கின்றீர்கள். நீங்கள் இனவாதிகளில் இருந்து வேறுபட்டவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் அரசாங்கம் என்ற வகையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
மயிலிட்டியில் 2013ஆம் ஆண்டில் இருந்த அரசாங்கம் 6000 ஏக்கர் காணியை வர்த்தமானியில் அறிவித்து அவற்றை சுவீகரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், 2017இல் அந்த காணிகளில் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. அந்த காணிகளில் மக்கள் வாழுகின்றனர். ஆனால் 6000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்ட வர்த்தமானி வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவில்லை. தொடர்ந்தும் 3000 ஏக்கர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் வாழும் மக்கள் சட்டப்பூர்வமாக இருக்கின்றனரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதனால் அந்த வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டும். இப்போது இராணுவத்தினர் மக்களின் காணிகளில் விவசாயம் செய்கின்றனர். இராணுவத்தினரிடம் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் தையிட்டி விகாரை விவகாரத்தில் காணிகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் எழுத்துமூலம் உத்தரவாதத்தை கொடுங்கள் என்று கேட்கின்றனர். அந்த காணிகள் அந்த மக்களிடம் கொடுக்க அளக்கின்றீரகள் என்றால் ஏன் எழுத்தில் கொடுக்க தயக்கம் காட்டுகின்றீர்கள். உங்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் ஏமாற்றியதை போன்று நீங்களும் ஏமாற்றுகின்றீர்கள். நீங்கள் பேய் காட்டும் கதைகளை நிறுத்தி நீங்கள் நேர்மையாக நடந்துகொள்வதற்கு எப்போது நீங்கள் செயற்பட ஆரம்பிக்கின்றீர்களோ அன்றைக்கு வடக்கு, கிழக்கில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். நீங்கள் சரியானதை செய்தால் நாங்கள் அதற்கு ஒத்துழைக்க தயார். அத்துடன் அவசரகால சட்டத்த்தால் காணப்படும் பிரச்சினைகளை புரிந்துகொண்டு நீங்கள் இந்த முறையாவது அவசரகால சட்டத்தை நீடிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்திற்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். கிண்ணியாவில் சின்னதோட்டம் இந்து சுடலைக்கு அருகில் குப்பையை கொட்டுகின்றனர். அங்கு பாரிய சுகாதார பிரச்சினையாக அமைகின்றது. இதனால் அந்த குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.
![]()