இந்தியா

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு; நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கின்ற போதும் விஜய் ஆட்சி அமைப்பதை தடுத்து வரும் ஆளுநர்

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநரும், விதிமுறைகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய்யும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நிலைமை தொடர்கிறது.

மேலும், பதவியேற்புக்கு முன்னரே, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் கோரப்பட்டுள்ளமை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலை உருவாகியிருக்கிறது.

தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியை, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுத்தால்தான் பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என்று ஆளுநர் சொல்ல முடியாது. காரணம் பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் பேரவை என்பதால் பதவியேற்புக்கு அனுமதிக்க வேண்டும் என சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகைக்குச் சென்று நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அவரிடம் வழங்கினார். அவ்வேளையில்,போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்று வருமாறு ஆளுநர் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்த அதேவேளை, விஜய்க்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட அதேவேளை,பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், நேற்று மீண்டும் விஜய், ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு 45 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்படி சந்திப்பில் பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் அளித்த விளக்கத்தில் ஆளுநருக்கு திருப்தியில்லாத காரணத்தினால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

”113 எம்.எல்.ஏ.க்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்? பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வைத்து நிலையான அரசை அமைக்க முடியுமா?

“118 எம்.எல்.ஏக்கள் ஆதரவை இருப்பதை காட்டுங்கள், அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா?’ என்று விஜயிடம் தமிழக ஆளுநர் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.அப்போது அவரிடம், விதிமுறைகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய் மீண்டும் வலியுறுத்தினார்.

“பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற ஆளுநரின் கேள்விகளுக்கு விஜய் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. அவர் அளித்த விளக்கத்தில் ஆளுநருக்கு திருப்தி இல்லை. இதனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது, பதவிப்பிரமாணம் செய்து வைப்பது பற்றி ஆளுநர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் தவெக கோரியிருந்த நிலையில்,முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும், தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பதே சரியென்று விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்துள்ள அதேவேளை, விஜய்யின் கூட்டணி கோரிக்கை பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,கட்சி தாவளை தடுப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். திமுகவும் தனியாக எம்.எல்.ஏ கூட்டத்தை நடத்துகிறது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

ஆளுநருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

“தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கான உரிமை?

ஆளுநா் சுயமாக முடிவெடுக்கலாம்…

எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப்பெரும்பான்மை இருந்தால் அரசியல் சாசனப் பிரிவு 164(1)-இன் கீழ் ஆளுநா் அதன் தலைவரை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்து, அவரது ஆலோசனைப்படி அமைச்சரவை சகாக்களையும் நியமிக்க வேண்டும். எந்தவொரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லாத நிலையில் மட்டுமே ஆளுநா் சுயமாக முடிவெடுக்க முடியும்.

அவகாசம் வழங்க ஆளுநருக்கு உரிமை

அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பாா் என்று ஆளுநா் கருதினால், கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரைப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் முதல்வராக நியமிக்கலாம். அவா்கள் குறிப்பிட்ட காலவரையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க ஆளுநருக்கு உரிமை உள்ளது. யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மரபுகள், முன்னுதாரணங்கள், சா்க்காரியா கமிஷன் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் அதிக எண்ணிக்கை பலமுள்ள கட்சி அல்லது கூட்டணிக்குத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

ஆனால், அது குதிரை பேரத்துக்கும், கட்சிப் பிளவுகளுக்கும் வழிகோலுமானால் அதைத் தவிா்க்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.ஆளுநரின் அடிப்படைக் கடமை நிலையான ஆட்சி அமைக்கப்படுவதுதான். அதற்கேற்ப முடிவுகள் எடுக்கும் உரிமையை அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்குகிறது.

சட்டப்பேரவை உறுப்பினா் அல்லாத, எந்தக் கட்சியையும் சாராத ஒருவரால் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்று ஆளுநா் கருதினால் அவரை முதல்வராக நியமித்து, குறிப்பிட்ட கால அளவில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.

இந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கு, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுத்தால்தான் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுப்பேன் என்ற பொறுப்பு ஆளுநரின் செயலுக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

ஆளுநரின் உரிமை குறித்து சட்ட வல்லுநர்கள் கூறுவதாவது: ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் ஆளுநருக்குதான் உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் உரிமைகோரும் கட்சியிடம் அதற்கான ஆதரவு பட்டியலை கொடுங்கள் என ஆளுநர் கூறுவதில் தவறில்லை. அதே நேரத்தில், பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியை, ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுத்தால்தான் பதவியேற்புக்கு அனுமதிப்பேன் என்று ஆளுநர் சொல்ல முடியாது. காரணம் பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் பேரவை என்பதால் பதவியேற்புக்கு அனுமதிக்க வேண்டும்.

ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ஆதரவை நிரூபிக்க முடியாத நிலையில், பேரவையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. பேரவையை கலைத்த பின்னர் அதிக நாள்கள் அதனை காலியாக வைத்திருக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உரிமை ஆளுநருக்கு உண்டு என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button