இந்தியா

“6 மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல்..” திடீரென அரசியல் பேசிய ஆனந்த் சீனிவாசன்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ள சூழலில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும்.. தேர்தலில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள அதிமுகவின் எதிர்காலம் என்னவாக ஆகும் என்பது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, பெரும்பான்மை நம்பரை பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தல் களம் தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “முதலில் அதிமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அதிமுக பிரதானமாகத் தென் தமிழகத்திலும், மேற்கு தமிழகத்திலும் வலுவாக இருந்த கட்சி. ஜெயலலிதா காலத்தில் ஒருமுறை மட்டுமே சென்னையில் ஏழு இடங்களை வென்றார்கள்.

அதைத் தவிர அவர்களால் சென்னையில் வெல்ல முடிந்ததே இல்லை. எனவே அடிப்படையில் அவர்கள் மேற்கு மற்றும் தென் தமிழகத்திற்கான கட்சி. மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஐந்து முக்கிய சமூகங்களில், இரண்டு பெரிய சமூகங்களின் ஆதரவு அதற்கு இருந்தது. அதன் மேல் ஒரு தலைவர் (ஜெயலலிதா) பாசிச முறைப்படி ஆட்சி செய்வார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே தலைமைதான் அனைத்தையும் முடிவு செய்யும், அவர்கள் சொன்னால் கேட்க வேண்டும் என்றே அந்த ஆட்சி இருந்தது. அப்படிதான் அவர்கள் அரசியல் செய்தார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் அப்படிப்பட்ட ஒரு தலைவராக இருக்கவில்லை. அவர் மற்றவர்களுக்கு (இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு) சமமான ஒருவராகவே இருந்தார். இரண்டாவதாக, அவர் பாஜகவிற்கு அடிமை போல ஆகிவிட்டார்.

தமிழ்நாட்டில் மக்கள் மத ரீதியாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட மதத்தை வைத்துப் பிரிப்பவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். அதேபோல் சாதி கட்சியாக இருந்தால் உங்கள் பகுதியில் செல்வாக்கு இருக்கலாம், ஆனால் தமிழ்நாடு முழுவதும் வர முடியாது.

‘மாற்றம் முன்னேற்றம்’ என்று அன்புமணி முயற்சி செய்தார், அது பெரிய தோல்வியில் முடிந்தது. பாமக ஒரு வன்னியர் கட்சியாகவே அறியப்படுகிறது.. நமது தமிழ்நாடு அரசியல் சூழல் இதுதான்! அதிமுக எனவே இனிமேல் அதிமுக ஒரு மாநிலம் தழுவிய சக்தியாக இருக்குமா என்றால் இருக்காது.

ஏனெனில் அவர்களுக்குத் தென் தமிழகத்தில் இருந்த அடித்தளம் போய்விட்டது. மேற்கு தமிழகத்தில் கடந்த முறை 50 இடங்களுக்கு மேல் வென்றார், இந்த முறை அங்கேயும் 20 இடங்கள்தான் வந்துள்ளன.

இந்தமுறை அதிமுக மெயினாக வென்றது வடதமிழகத்தில் தான். பாமகவிடம் இருந்து வந்த வாக்குகளே அதற்குக் காரணமாக இருந்தது. வட மற்றும் மத்திய தமிழகத்தில் மட்டும்தான் அவர் வென்றுள்ளார்.

எனவே, அதிமுகவுக்கு எப்படி எதிர்காலம் இருக்கும். மீண்டும் தேர்தல் விஜய் சரியாகக் காய்களை நகர்த்தினால், அதிமுகவின் ஓட்டு வங்கியை அவரே எடுத்துக்கொள்வார்.

தற்போது ஒரு தொங்கு சட்டமன்றம் வந்துவிட்டது. விஜய்க்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படும், அதைச் சிறிய கட்சிகள் கொடுப்பார்கள். இப்போதைக்கு அவர் ஆட்சி அமைப்பார்.

அவரும் அரவிந்த் கெஜ்ரிவால் போலப் புத்திசாலித்தனமாக ஒரு ஆறு மாதத்தில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்தித்தால், நல்ல மெஜாரிட்டியில் வெற்றி பெறுவார் என்பது எனது கணிப்பு. அல்லது சிறு கட்சிகளுடன் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button