இந்தியா

60 வருட திராவிட ஆட்சி முடிவுக்கு வந்தது; தமிழகத்தில் விஜயின் விஸ்வரூப வெற்றி!

60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 1 கோடிக்கும் அதிகமான வாக்குகளை கடந்து, தமிழக வெற்றிக் கழகம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்ற நிலையிலேயே முதற்தடவையாக களம் கண்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறது.

மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருப்பதில் தமிழகம் என்றுமே முன்னிலை என்பதை வளர்ச்சியில் மட்டுமல்ல, சிந்தனையிலும் புதிய உதாரணத்தை தேர்தல் கால வரலாற்றில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் உணர்த்தி இருக்கிறது.

அதற்கமைய 60 ஆண்டுகால திராவிட இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளை எளிதாக ஓரங்கட்டி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிய தடத்தை பதித்துள்ளது.

“தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இந்த செய்தி எழுதப்படுவரை (நேற்று திங்கட்கிழமை மாலை) வெளியான முடிவுகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றுள்ளது. அடுத்த இடத்தில் திமுக இருந்தாலும்கூட, ஏற்கனவே இரண்டு முறை வென்ற கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோல்வியடைந்திருப்பது திமுகவினருக்கு மட்டுமல்லாமல், திமுகவுக்கு வாக்களித்த பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்றாவது இடத்தில் அதிமுக உள்ளது. தமிழ்நாட்டில் 167 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி பின்னடைவை சந்தித்தபோதும், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, எடப்பாடிதொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

 

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதில் பெரம்பூர் தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கு தொகுதியில் 26,000 வாக்குகள் வித்தியாத்திலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

தனிப்பெரும்பான்மை என்ற 118 தொகுதிகளில் வென்று தவெக ஆட்சியைப் பிடிக்குமா?

பெரும்பான்மைக்கு ஒரு சில எண்ணிக்கை குறைந்து, மற்ற கூட்டணிகளில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி, ஆதரவு பெற்று பெரும்பான்மை பலத்தை உறுதி செய்யுமா என்பது, அடுத்தடுத்து வெளியாகும் வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி தொடங்கி சில ஆண்டுகள் தான் ஆனது. இந்த தேர்தல் தான் அக்கட்சி சந்தித்த கன்னி தேர்தலில் அதிமுக, திமுக என்ற இருபெரும் பாரம்பரியமிக்க கட்சிகளை பின் தள்ளி, கட்சியின் பெயரில் இருக்கும் வெற்றியின் மற்றொரு பெயரான வாகையை சூடி இருக்கிறது. ஆட்சி அமைக்க குறைந்தது 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதற்கு குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்குகளாவது அவசியம் என்ற நிலையில் தேர்தலை சந்தித்தது தவெக. வேட்பாளர்கள் எந்த பின்னணியிலும் இல்லை, திறமையான பேச்சாளர்கள் இல்லை. மக்களிடம் நேரிடையாக அணுகும் அல்லது அணுகிய வேட்பாளர்கள் இல்லை. எனவே தோற்பது உறுதி என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருந்தது.

ஆனால், ஒட்டுமொத்த கணிப்புகள்+ கருத்துக்களையும், கதறவிட்ட தவெக தமிழக அரசியலில் 1 கோடியே 20 லட்சம் வாக்குகளை கடந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 35 சதவீதம் வாக்குகளை இக்கட்சி அள்ளி இருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகாலத்தில் ஒரு கட்சி உதயமாகி தேர்தலில் பங்கெடுத்து மிக குறுகிய காலத்தில் இத்தனை சதவீதம் வாக்குகளையும் , தொகுதிகளையும் பெற்றது இல்லை.

இது ஒரு புதுவித மற்றும் உற்று நோக்க வேண்டிய சாதனை என்கின்றனர் அரசியலை இதுகாறும் உன்னிப்பாக பார்ப்பவர்கள். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி தேர்தலை சந்தித்த போது பெற்ற வாக்கு சதவீதம் 33.5 என்றும் அவர்கள் நினைவுபடுத்துகின்றனர்.அரியணையை தன்வசப்படுத்தி ஆச்சரியம் தந்துள்ள தவெகவுக்கு இனிமேல் தான் சவால்களும், போட்டிகளும் களப்பணியில் அதிகம். மக்களின் எண்ணங்களை பூர்த்தியாக்க வேண்டும் என்பதே வாக்களித்தவர்களின் இமாலய எதிர்பார்ப்பு.

தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும்?

118 தொகுதிகள் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் கிடைக்கவில்லை என்றால், எந்தக் கட்சி அதிக தொகுதிகளை வெல்கிறதோ அந்தக் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரலாம்.

ஆளுநரும் தனிப் பெரும் கட்சியாக இருக்கும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார். அதன் அடிப்படையில் ஆட்சி அமைத்தபிறகு அந்தக் கட்சி குறைந்தப் பட்சம் 15 நாளுக்குள் அல்லது ஆளுநர் நிர்ணயிக்கும் காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

அப்படி நிரூபிக்க தவறிவிட்டால் ஆளுநர் அந்த ஆட்சியை கவிழ்த்து அடுத்த பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்புவிடுவார். அந்தக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சி அமைக்கலாம். ஒருவேளை எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அரசியல் அமைப்பு விதி 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்குவரும். பிறகு மறுதேர்தல் நடத்தப்படும்.

மீண்டும் திரும்புகிறதா 2006?

2006 சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார் கருணாநிதி. அதேபோல் இந்த 2026 சட்டசபை தேர்தலிலும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால் யார் ஆட்சி அமைப்பர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் 2006ல் மட்டுமே எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது அதிகபட்சமாக 96 இடங்களில் திமுக வென்றிருந்தது. இதனால் தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், பாமக, கம்யூ., கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது திமுக. கூட்டணி கட்சிகள் ஆதரவளித்தாலும் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.

இதனைக் குறிப்பிட்டே எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, வார்த்தைக்கு வார்த்தை ‘மைனாரிட்டி திமுக அரசு’ என சொல்லிக்கொண்டே இருந்தார். பிரசாரத்திலும் அதையே குறிப்பிட்டு பேசி 2011ல் ஆட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதா. அதன்பிறகு நடந்த தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மை உடனேயே அதிமுக, திமுக கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தன. ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 72 இடங்களிலும், அதிமுக கூட்டணி 55 இடங்களிலும் 9இந்த செய்தி எழுதப்படும்வரை) முன்னிலை வகித்தன.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் இப்போதிருக்கும் சூழலில் எந்த கட்சியும் அந்த நிலையை எட்ட வாய்ப்பில்லை என்றே அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, 2006 தேர்தலை போல மீண்டும் ஒரு காட்சி அரங்கேறியுள்ளது தமிழகத்தில். விஜயின் த.வெ.க தான் அதிக இடங்களை கையில் வைத்துள்ளதால் விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியில் அமர வாய்ப்புள்ளது. விஜய் ஆட்சி அமைக்க அதிமுக, விசிக., காங்., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெறலாம் எனவும் தமிழக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

விசில் அலையில் வீழ்த்தப்பட்ட தேசிய கட்சிகள்!!

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியின் வெற்றியால் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., படுதோல்வி அடைந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.,வும், திமுக கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றன. இந்த இரு தேசிய கட்சிகளும் தங்கள் கூட்டணியிடம் பிடிவாதமாக அதிகமான தொகுதிகளை கேட்டுப் பெற்றன.

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பா.ஜ., 26 உட்பட அதன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் மட்டும் 33 பேர். அதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் 28 பேர் போட்டியிட்டனர்.

விசில் சின்னத்தில் போட்டியிட்ட விஜயின் தவெக அதிகமான இடங்களை பெற்று முன்னிலை வகிக்கின்றன. ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளுக்கு எதிராக மக்களிடையே ‘விசில் புரட்சி’யே ஏற்பட்டது போல, மாநில கட்சிகளை ஓரங்கட்டியது இந்த தேர்தல்.

அதோடு தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரசுக்கும் அதே நிலையே ஏற்பட்டுள்ளது. பா.ஜ., 3 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. அந்த வகையில் விசில் அலையில் தேசிய கட்சிகள் பலமாக அடிவாங்கியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button