உலகம்

இஸ்ரேல் – அமெரிக்கா இடையே பில்லியன் டாலர் போர் விமான ஒப்பந்தம்

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) மற்றும் போயிங் (Boeing) நிறுவனங்களிடம் இருந்து அதிநவீன F-35 மற்றும் F-15IA போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கான பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டின் ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள 350 பில்லியன் ஷெக்கல் (119 பில்லியன் டொலர்) மதிப்பிலான நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கொள்முதல் நடைபெறுகிறது.

இதன் மூலம் இஸ்ரேலிய விமானப்படைக்கு ஒரு புதிய F-35 ஸ்குவாட்ரனும், ஒரு F-15IA ஸ்குவாட்ரனும் கூடுதலாகக் கிடைக்கவுள்ளன.

இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் அமீர் பாரம், “தற்போதைய காலத்தின் உடனடித் தேவைகளைத் தாண்டி, அடுத்த 10 ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திலும் இஸ்ரேலின் ராணுவ வலிமையைத் தக்கவைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஈரானுடனான தற்போதைய போர்ச் சூழலில் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தந்திரோபாய உறவு மற்றும் வான்வழி அதிகாரத்தின் முக்கியத்துவத்தை இந்த ஒப்பந்தம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் போயிங் நிறுவனத்துடன் 25 புதிய F-15IA விமானங்களை வாங்குவதற்கு 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த கொள்முதல் குறித்துக் கூறுகையில், “எங்கள் விமானிகளின் பலத்தை இது மேலும் அதிகரிக்கும். தேவைப்பட்டால் ஈரானிய வான்பரப்பின் எந்தப் பகுதிக்கும் சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் எமது வீரர்களுக்கு உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போரில் இஸ்ரேலிய விமானப்படை முக்கியப் பங்காற்றிய நிலையில், எதிர்காலப் பாதுகாப்பிற்காக அடுத்த தலைமுறை தற்காப்பு அமைப்புகள் மற்றும் தன்னாட்சி விமானத் தொழில்நுட்பங்களை (Autonomous flight capabilities) ஒருங்கிணைப்பதே தமது இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரானுடனான போர் தற்காலிகப் போர்நிறுத்தத்தில் இருந்தபோதிலும், தனது வான்வழி ஆதிக்கத்தைத் தக்கவைக்க இஸ்ரேல் இத்தகைய பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button