இலக்கியச்சோலை

சிட்னியின் சமூக சிந்தனையாளரும், தமிழ் பற்றாளருமான பொன்மயிலைநாதன் !…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

சிட்னியில் தமிழும் சைவமும் மேலோங்கி வளர, பெருந் தொண்டு ஆற்றிய மூத்த சமூக சேவையாளரான திரு சுப்பிரமணியம் பொன்மயிலைநாதன் 26.04.2026 அன்று அன்று இறைவனடி சேர்ந்தார்.
மறைந்த பொன்மயிலைநாதன் அவர்கள் தமிழ் சமூகத்தினர் மத்தியில் அன்பிற்கும் , உயர் பண்பிற்கும் இலக்கணமாய் திகழ்ந்தவர். சிட்னியில் வாழ்ந்த ஓர் நல்ல சமூக சிந்தனையாளரை நம் அவுஸ்திரேலிய தமிழ் சமூகம் இழந்துள்ளது.
சிட்னியின் சமூக சிந்தனையாளரும், தமிழ் பற்றாளருமான திரு சுப்பிரமணியம் பொன்மயிலைநாதன் யாழ்ப்பாணம், மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சிட்னி, அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டவர்.
உயர் பண்புடைமை காத்து, சமூகத்தினை பக்குவமாய் வழி நடத்திய மறைந்த பொன்மயிலைநாதன் அவர்கள் இரக்கத்தின் இருப்பிடமாய் இருந்தவர்.
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தவர்.
தாயக தேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் பல உதவிகளை புரிந்த உண்மையின் ஒளி வீசிய ஆன்மாவாக விளங்கியவர்.
பரிவும் கனிவும் நிறைந்த இதயம், தாராள மனம் கொண்டவர். கர்நாடக இசையின் இனிமையை உயிராய் நேசித்த ரசிகர். எப்போதும் பிறர் நலனையே நாடிய அற்புதமான மனிதர். பொன்மயிலைநாதன் பலரின் வாழ்வில் நன்மையின் சுவடுகளைப் பதித்தவர். அவரது நேர்மை, அன்பு, பரிவோடு கூடிய இயல்பு நினைவுகளின் வழியாக எந்நாளும் மென்மையாய் ஒளிரும்.
அமைதியின் உருவமாகவும், 
அடக்கத்தின் இருப்பிடமாகவும் இருந்த மறைந்த திரு. பொன்மயிலைநாதன் அவர்கள் பண்பின் பெருந் தகையாகவும் விளங்கியவர்.
சமூகத்தில் அனைவரையும் சமமாக மதித்து காணும் இடங்களிலும் எல்லாம் வணக்கம் சொல்லி நலம் விசாரிக்கும் சிறந்த மனிதர். சமூக அக்கறை கொண்ட பொதுநலவாதியும் அவரே.
தமிழ் மூத்தோர் சங்கங்கள் அத்தனையிலும் முன்னின்று உழைப்பவர். இன்முகத்துடன் பேசி பல காரியங்களை சாதிக்கும் திறமையுடன் சமூக சேவையாளர் ஆக வாழ்ந்து மறைந்த திரு பொன்மயிலைநாதன்
அவரது வாழ்வு போற்றுதற்கு உரியது.
அத்துடன் அவர் சிறந்த தமிழ் பற்றாளரும் சமூக சிந்தனையாளராக விளங்கிய மறைந்த பொன்மயிலைநாதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானரையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கு ஒப்பாக வாழ்ந்தவர்.
இளம் தமிழ் சந்ததியினரை ஊக்கப்படுத்தி, எப்பொழுது எங்கு கண்டாலும் சந்தோஷமாக சிரித்து கதைத்து பேசும் மறைந்த பொன்மயிலைநாதன் அவர்களின் இழப்பு சிட்னி தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும். சைவமும் தமிழும் எங்கள் கண்கள் மட்டுமல்ல அடையாளமும் தான். தமிழருக்கே அடையாளம் தந்த எங்கள் சைவ நெறியின் மேன்மையை புலம் பெயர் மண்ணில் காத்து வளர்த்திட்ட பெருமையில் சிட்னியில் முதன்மையானவர் மறைந்த பொன்மயிலைநாதன் அவர்களாவார்.
தமிழும் சைவமும் கண்ணென வாழ்ந்த மறைந்த பொன்மயிலைநாதன் தமிழ் மண் பெற்ற சிறந்த சேவையாளனாக ரசனை மிகு கலைஞராக , பழந்தமிழ் இலக்கிய வாசகராக விளங்கியவர். தமிழுக்கும், சிட்னி தமிழ் சமுகத்திற்கும் ஆற்றிய அளப்பரிய பணிக்கு எமது சமுகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது. அவர் ஆற்றிய உயரிய சேவைகளால் , எம்மவர் மனங்களில் என்றும் வாழ்வார்.
அவர் என்றும் தமிழ் மக்கள் மனதில் நிற்பார் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் கோயில்கள், தமிழ்ப் பாடசாலைகள், தமிழ் அமைப்புகள்கள் நடாத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரின் புன்முறுவல் பூத்த முகத்தினை என்றும் காணலாம். அவுஸ்திரேலியா மண்ணில் நீண்ட காலம் சமூகப்பணியாற்றிய அவரின் மறைவு பேரிழப்பாகும். சிட்னி தமிழ் மக்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியதும் அளவிட முடியாததாகும்.
தற்பெருமை இல்லா சமுக தொண்டனாக, தமிழ் சமூகத்துக்கு மகத்தான சேவை புரிந்தவர். அவரின் மறைவு சிட்னி தமிழ் சமூகத்துக்கு பெரும் இழப்பாகும். எப்பொழுதும் நல் மதிப்பும், அன்பும் பாராட்டும் அன்பிற்குரிய பொன்மயிலைநாதன் ஐயா சிட்னி வாழ் தமிழ் மக்களால் எப்போதும் நினைவு கூறப்படுவார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button