இலங்கை

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் நேர்ந்த தற்கொலை என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது.

நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாகக் கைமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, நேற்று (30) தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

அவரது கை மற்றும் காலில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்த உதவிப் பணிப்பாளரின் உடற்கூறு பரிசோதனைக்காக நான்கு சட்ட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில், உடற்கூறு பரிசோதனை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இன்று (01) பிற்பகல் நடைபெற்றது.

அதன்படி, இந்த மரணம் அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் ஏற்பட்டது என்பதை விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நான்கு சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button