இலங்கை

விமர்சனங்களை மறைக்கவே அர்ச்சுனா எம்.பி எம்மீது குற்றம் சுமத்துகிறார்: ஈ.பி.டி.பி சாடல்

தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும் மறைப்பதற்கும், தன்னை ஒரு புனிதராகக் காட்டுவதற்குமே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முயற்சிக்கின்றார். அதன் ஒரு வெளிப்பாடே எம்மீதான குற்றச்சாட்டாகும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் காணி முரண்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கும், ஈ.பி.டி.பி கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அக்கட்சி திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளது.

யாழ். ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் மானிப்பாய் பிரதேச அமைப்பாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர் மேலும் தெரிவித்ததாவது:

“தமக்கு எதிரான விமர்சனங்களை மறைக்கவும், தங்களைத் தியாகிகளாகக் காட்டவும் விரும்புபவர்கள் கையில் எடுக்கும் எளிதான வழிமுறைதான் ஈ.பி.டி.பி மீதான விமர்சனம். இதுவே நீண்டகால வரலாறாக இருந்து வருகின்றது.”

“அந்த அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, 2023-ஆம் ஆண்டு எமது செயலாளர் நாயகத்துடன் மேற்கொண்ட உரையாடலின் ஒரு பகுதியை தற்போது வெளியிட்டுள்ளார்.

உண்மையில், அக்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக எமது செயலாளர் நாயகம் அப்போதே பிரதேச அமைப்பாளர் ஊடாக விசாரணை நடத்தி, எமது கட்சி உறுப்பினர்களுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். அத்துடன் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.”

“தனக்கு எதிரான தற்போதைய விமர்சனங்களைத் திசைதிருப்பவே பழைய உரையாடலை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார். எது எப்படியாயினும், ஈ.பி.டி.பி அதிகாரத்தில் இருந்த காலத்தில்கூட, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதோ அல்லது ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்களை மிரட்டியதோ இல்லை என்பது அர்ச்சுனாவின் கருத்துக்களிலிருந்தே தெளிவாகின்றது” என அவர்கள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *