இலங்கை

கேப்பாபிலவு இராணுவ முகாம் முன்பாக நாளை ஆர்ப்பாட்டம்; அப் பகுதி மக்கள் அழைப்பு

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக நாளை மே 1 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனைத்து தரப்பினரையும் ஆதரவு தந்துதவுமாறும் கேப்பாபிலவு மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பாக கேப்பாபிலவு மக்களால் நினைவூட்டல் கடிதம் ஒன்று நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேப்பாபிலவு மக்கள்,

கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக வாழ்விடத்தை கோரி அரசிடம் நீதி கேட்டு வருகின்றோம். கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் உபாலி சமரசிங்க எங்களை சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக சாதகமான முடிவை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். பல மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அவர் ஊடாக அமைச்சருக்கும் காணி விடுவிப்பு தொடர்பான நினைவூட்டல் கடிதம் ஒன்றினை கையளிக்க வந்துள்ளோம்

அதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியபோது காணி விடுவிப்பு தொடர்பாக எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.மேலும், இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட காலத்தில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டன , அக்குடும்பங்களுக்கு காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டன.ஏறத்தாழ 255 குடும்பங்களுக்கு சொந்த காணி மற்றும் மாற்றுக் காணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 55 குடும்பங்களுக்கு இதுவரை சொந்த காணி கிடைக்கவில்லை. மேலும், 11 குடும்பங்களுக்கு மாற்றுக் காணியும் வழங்கப்படாமல் உள்ளன.

இவர்கள் வாழ்வாதாரமாக கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை நம்பியிருந்த போதிலும், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் மக்களின் வாழ்விடத்தில் இன்னும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் காணி அபகரிப்பு தொடர்வது தேவையற்ற ஒன்று. ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களின் காணியை மக்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும், எ மது வாழ்வாதாரங்களும் தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மே மாதம் 1ஆம் திகதி தொழிலாளர் தினத்தன்று கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *