இலங்கை

பிக்குகள் மீதான நடவடிக்கையை வரவேற்பதோடு தமிழர் நில ஆக்கிரமிப்புகளிலும் நீதியை நிலை நாட்டுங்கள்

போதை வஸ்து கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள் மீதான நடவடிக்கையை வரவேற்பதோடு தமிழர் நில ஆக்கிரமிப்புகளிலும் நீதியை நிலை நாட்டுங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உலக சமாதானத்திற்காகன பிக்குகளின் நடைப்பயணத்தை பின் தள்ளி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதை வஸ்து கடத்தல் காரணமாக கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பாக செய்தி நாடு முழுவதும் முக்கிய பரபரப்பான செய்தியாகியுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளை உடனடியாக பிக்கு நிலையில் இருந்து நீக்குவதற்கான அதிரடி நடவடிக்கையினை நான்கு மஹநாயக்க சங்க தலைமை பீடங்களும் கூட்டாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதே.

நீதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு இது துணை செய்யும். சிங்கள பௌத்த பேரின வாதம் போதையாகி உள்ள இலங்கையில் அதன் போதை தலைக்கேறி காவி உடையோடு பிக்குகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தும் புத்தரின் சிலைகளை ஆங்காங்கு வைத்தும் தமிழர் பகுதிகளில் அமைதி வாழ்வினை சீர்குலைக்கும் பௌத்த தர்மத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக எந்த ஒரு மகா சங்கத்தினரும் நடவடிக்கை எடுக்காதிருப்பது தமிழர்களுக்கு கவலையையும் வேதனையையும் தருகின்றது.

எந்த சமயத்தவர்களாக இருந்தாலும் சமய அடையாளங்களை பாவித்து சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஏற்கவோ அங்கீகரிக்கவோ முடியாது. இவ்வாறு ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகளே. தண்டனைக்குரிய குற்றவாளிகளே.

போதைவஸ்து நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்வதற்கு முன்பே சிங்கள பௌத்த பேரினவாதம் எனும் கொடிய போதையினை அரசியல்வாதிகளாலும் ஒரு சில பிக்குகளாலும் கிராமிய மக்கள் மத்தியில் திட்டமிட்ட வகையில் தலைக்குள் ஊற்றப்பட்டது. அது தலைக்கேறிய நிலையில் அரசியல் வாதிகளாலும் காவி உடை தரித்த பிக்குகளாலும் அது நிறுவனமயமாக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் வழிவகைத்தது என்பதை அனைவரும் அறிவர்.

முள்ளிவாய்க்காலோடு நின்று விடாது இன்றும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக பகிரங்கமாக இனவாதம் கக்கும் ஞான சார தேரர், கஸ்ஸப தேரர், அம்பட்டிய சுமனரத்ன தேரர் போன்றோர் பௌத்த தர்மத்திற்கு எதிராக பகிரங்கமாகவே செயற்படுகின்றனர். இது தெரிந்தும் பிக்கு நிலையிலிருந்து அவர்களை அகற்றுவதற்கு மட்டுமல்ல அவர்களின் செயலை கண்டிக்க எந்த ஒரு மகா சங்கத்தினரும் துணியாது அமைதி காப்பது ஏன்?

அதுமட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்தும், சிங்கள பௌத்தர்களே இல்லாத இடங்களில் எல்லாம் பலாத்காரமாக அரச மரக்கன்றுகளை நடுவதும், புத்தர் சிலைகளில் வைப்பதும் பௌத்த தர்மத்திற்கு எதிரானது என தெரிந்தும் போதை வஸ்து கடத்தலில் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பாக நடுநிலை கருத்து தெரிவிக்கும் பிக்குகளும் அமைப்புகளும் வாய் திறக்காதிருப்பது ஏன் ?

தையிட்டியில் தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீக காணியிலேயே ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு இராணுவத்தால் சட்டவிரோத விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விகாரையின் பிக்கு பௌத்த தர்மத்திற்கும் அதன் போதனைகளுக்கும் எதிராகவே செயல்படுகின்றார் என்று வெளிப்படையாகவே தெரிகிறது.சட்ட விரோத பிக்குவிற்கு ஆதரவாகவே பொலிசாரும் செயல்படுகின்றனர்.

ஆட்சியாளர்களுக்கும் விகாரை சட்ட விரோதமானது, அநீதியானது, பௌத்த தர்மத்திற்கு எதிரானது எனத் தெரிந்தும் நீதியை நிலை நாட்ட தயங்குவது சிங்கள பௌத்தத்திற்கு பயந்தே. இச் சூழ்நிலையில் நீதியை நிலை நாட்டுவதற்கு பௌத்த தர்மத்தின் அதன் போதனைகளின் வழி நின்று மகா சங்கத்தினர் செயற்படாதிருப்பது ஏன்? அது தமிழர்களின் காணி. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்காகவா?

மக்களை விழிப்பு நிலைக்கு தள்ளாது போதை மயக்க நிலைக்குள் தள்ளும் எல்லாம் ஆபத்தானவைகளே. உலக சமாதானத்திற்கான பாதயாத்திரையை வரவேற்கின்றோம். ஆனால் அதே பாதயாத்திரை இன்று சுய விளம்பரத்திற்காகவும்,சுய அரசியலுக்காகவும், சில விளம்பரத்திற்காகவும், சிங்கள பௌத்த மக்களை கவர்வதற்காகவும் பாவிப்பது பௌத்த போதனைக்கும் தர்மத்திற்கும் எதிரானதே.இதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு எதிராகவும் பௌத்த நலன் விரும்பிகள் குரல் எழுப்ப வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில் சமாதானம் என்பது அரசியல், பொருளாதாரம், சமத்துவம், இனங்களின் தனித்துவ கௌரவம் சார்ந்தது.நில உரிமை சார்ந்தது. அது காக்கப்படுவதன் மூலமே சகோதரத்துவம் நிலைக்கும்.நாட்டில் அமைதி நிலவும்.ஆனால் இலங்கையில் அரசியல் கட்டமைப்பு அதற்கு எதிரானது. அது பௌத்தத்துக்கும் எதிரானது. தற்போது பௌத்தத்தை பாதுகாப்பதாக கருத்து தெரிவித்துக் கொண்டு இருக்கின்ற அனைத்து தரப்பினரும் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டும் போதே நாட்டின் எதிர்காலம் நலமாக அமையும்.இதன் மூலமே பௌத்தம் காக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *