இலங்கை

ஊழல் இல்லாத அரசாங்கம் ஆட்சி செய்வதில் ஆட்சேபனை இல்லை – சிறீநேசன் எம்.பி!

ஊழல் மோசடிகள் இல்லாமல் ஆட்சி செய்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்வதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள், உயிர்க்கொலைகள், கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற மோசமான செயல்கள் நடைபெற்றன.

இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து ஆட்சி அமைப்பார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 49வது ஆண்டு நினைவு தினம் நேற்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கடந்த காலங்களில் உண்மைகளை மூடி மறைக்கின்ற ஒரு செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதாவது அந்த பலியானவர்கள் தான் முக்கியமான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டிருந்தது.

மூன்று ஜனாதிபதிகள் அந்த உண்மைகளை மறைத்துச் சென்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய நிலையில் அந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய கூட இருந்தவர்கள் சாட்சியங்களாக மாறி உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இப்போது நடைபெறுகின்ற விசாரணை திருப்தியளிக்கின்றது. உண்மையான குற்றவாளிகள் பிடிபடக்கூடிய நிலைமை இருக்கின்றது. யாரும் அப்பாவிகளாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அப்பாவிகள் வேடத்தில் கொடும் பாவிகளாக இருந்து இந்த குற்றச்செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

உயிர்களைப் பலியெடுக்கலாம் உண்மைகளைப் புதைக்க முடியாது. புத்தகங்களை எழுதி உண்மைகளை மறைக்கின்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இப்போது அந்த விடயங்கள் எல்லாவற்றையும் எல்லாவற்றையும் கடந்து உண்மைகள் வெளிக்கொணரக்கூடிய ஒரு நிலை காணப்படுகின்றது.

எனவே பாதிக்கப்பட்ட 278 மக்கள், கொல்லப்பட்ட 278 மக்கள் இருக்கின்றார்கள், அப்பாவிகள், பக்தர்கள். அதேபோன்று 500-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களுடைய உயிரைப் பெற முடியாது நீதி கிடைக்க வேண்டும். இதற்குச் சூத்திரதாரியாக இருந்தவர் பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்போது மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ளவரும் கைது செய்யப்பட்டு உள்ளுக்குள் இருக்கின்றார். அவரும் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படுகிறது. அவரோடு இன்னொரு அரசியல்வாதியும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. எவராக இருந்தாலும் இந்த அப்பாவிகளைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். அந்தத் தண்டனை நீதியின் மூலமாக சட்டத்தின் மூலமாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.”

உண்மையில் தற்போதைய நிலையில் ஆளுங்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் மிகவும் நலிவான அல்லது பலவீனமான நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய நிலைமை இப்போதைக்கு எங்களுக்குத் தெரியவில்லை.

வழக்கமாக எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை வீழ்த்தி ஆட்சிபீடம் ஏற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுண்டு. அந்த அடிப்படையில் அவர் சிந்திக்கின்றார்கள். ஆனால் தற்போதான நிலையில் அதற்குரிய வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் நீதியாக நியாயமாக அரசாங்கம் இயங்குமாக இருந்தால், ஊழல் மோசடி இல்லாமல் இயங்குமாக இருந்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்ந்து செல்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

நீதியாக இருக்க வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும், சமத்துவமாக இருக்க வேண்டும். அதே இடத்தில் சட்டப்படியான ஆட்சி இருக்க வேண்டும். ஊழல் மோசடிகள் இல்லாமல் ஆட்சி செய்தால் அந்த அரசாங்கங்கள் தொடர்வதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள், உயிர்க்கொலைகள், கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற மோசமான செயல்கள் நடைபெற்றன. இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து ஆட்சி அமைப்பார்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கின்றது. ஆகவே மக்கள் அதனைப் பார்த்துக்கொள்வார்கள் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *