இலங்கை

25 லட்சம் டொலர் விவகாரம்; அதிகாரிகளைத் தப்ப வைக்க அரசு முயற்சிக்கின்றது

2.5 மில்லியன் (25 லட்சம்) டொலர் நிதி திருடப்பட்ட சம்பவத்தில் நிதியை கணக்கில் வைப்பு செய்வதற்காக அனுமதி வழங்கிய அதிகாரிகளை குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கச் செய்வதற்காகவே ஹெக்கர்கள் தொடர்பில் அரசாங்கம் கூறுகின்றது என்று ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவிக்கையில்,

2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிரி லோயர்ஸ் அமைப்பினால் வெளியிடப்படும் வரையில் அரசாங்கம் இது தொடர்பில் எந்த தகவல்களையும் வெளியிடாமல் அவற்றை மூடி மறைத்து வந்ததுள்ளது. இது ஹெக்கர்களின் வேலை என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால் கூறப்படும் தகவல்களை பார்க்கும் போது ஹெக்கர்களின் வேலையாக தெரியவில்லை.

சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் தகவல்களை திருடுபவர்களே ஹெக்கர்கள் எனப்படுவர். ஆனால் இந்த சம்பவத்தில் அவ்வாறு நடக்கவில்லை. அதாவது அமைச்சு, மத்திய வங்கி, திறைசேரி என்று கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் குறைந்தது 5 முதல் 18 பேரின் அனுமதியுடனேயே நிதி விடயங்கள் நடக்கும். இவ்வாறு அனுமதி வழங்கிய அதிகாரிகளை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான முயற்சியாகவே ஹெக்கர்கள் தொடர்பில் கூறுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சட்டமா அதிபரும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்க வேண்டும். அவ்வாறாக விசாரணைகள் நடத்தப்பட்டதா?

அதேபோன்று ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் இந்த விடயத்தில் முன்னெடுத்த நடவடிக்கை என்ன? அவர் அது தொடர்பில் ஏன் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவில்லை என்றும் கேட்கின்றோம். அத்துடன் மத்திய வங்கி இது தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை என்ன? என்று கேட்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *