முச்சந்தி

திறைசேரிச் செயலாளர் பதவி விலக வேண்டும்; எதிர்க் கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து

2022 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். தாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் தங்களதும் நாட்டினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதே இதற்குக் காரணமாக அமைந்து காணப்பட்டன. இந்த போராட்டத்தின் விளைவாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் இளைஞர் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் துறைசார் மேற்பார்வை குழுக்களில் 500-600 வரையிலான இளைஞர்களை நேர்காணல் மூலம் நியமித்தது முக்கியமான நடவடிக்கையாக அமைந்து காணப்பட்டன. இதன் மூலம் அரசியல் பங்கேற்புக்கான வட்டம் விரிவடைந்தாலும், தற்சமயம் துறைசார் மேற்பார்வை குழுக்கள் குறைக்கப்பட்டு, இளைஞர் பிரதிநிதித்துவமும் நீக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) இளம் தொழில் வல்லுநர்கள் தரப்புடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்

துறைசார் மேற்பார்வைக் குழுக்களை குறைத்து இளைஞர்களை நீக்கியதும், பாராளுமன்றத்தின் பலத்தை குறைத்ததும், அண்மையில் நாடு இழந்த 2.5 மில்லியன் டொலருடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு இது பெரிய பிரச்சினையாக தெரியாவிட்டாலும், இந்த இழப்பை சரிசெய்ய வரிச் சுமையை அதிகரிக்க வேண்டி வரும்.

தினந்தோறும் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நமது நாட்டில் இவை குறைபாடின்றி நடைபெற வேண்டும். திறைசேரி கடன் செலுத்துவதற்கு பல நடவடிக்கைகள் காணப்படுகின்றன. மக்கள் இவற்றை ஆராய வேண்டும். இவற்றை முன்கூட்டியே கணித்து தவிர்க்க முடிந்தாலும் இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாக இது நடந்துவிட்டது. இதில் மோசடியான நடவடிக்கை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இத்தகைய சம்பவம் நடந்தபின் திறைசேரி செயலாளர் இராஜினாமா செய்து வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்த வேண்டும். பாராளுமன்ற நிதி பற்றிய குழுவில் திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநரை அழைத்து விசாரிக்க வேண்டும். இதில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்று ஆராய வேண்டும்.

கடன் தவணை செலுத்தாததால் கடன் தவறல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் அரசாங்கம் நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும். நிதி அமைச்சர் மற்றும் செயலாளர் இவற்றை நாட்டிற்கு தெளிவுபடுத்த வேண்டும். இனியாவது இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பான நடைமுறைகளை இப்போது முதலே பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *